Published : 05 Jan 2018 04:50 PM
Last Updated : 05 Jan 2018 04:50 PM

புவனேஷ்வர் 3 விக்கெட்டுக்குப் பிறகு டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ் ஆதிக்கம்

 

பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 12/3 என்ற நிலையிலிருந்து மீண்டெழுந்து உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.

தளர்வான பந்துகள் மற்றும் டிவில்லியர்ஸின் அடித்து ஆடுவதற்கான விருப்புறுதி இரண்டும் கலக்க 19 பவுண்டரிகள் உணவு இடைவேளைக்கு முன்னதாக சாத்துமுறை நடந்தது. டிவிலியர்ஸ் தன் 41-வது டெஸ்ட் அரை சதத்தை எடுத்து 11 பவுண்டரிகளுடன் 65 பந்துகளில் 59 ரன்களுடனும் டுபிளெசிஸ் 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தும் களத்தில் இருக்கின்றனர்.

பிட்ச் பற்றி சரியான தகவல் இல்லை என்றாலும், டுபிளெசிஸ் பிட்ச் முதல் நாள் கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கும், ஆனால் பவுலர்களுக்கும் உதவியிருக்கும் ஆனாலும் பேட்டிங் என்றார், விராட் கோலி தான் பவுலிங்கைத்தான் தேர்வு செய்திருப்பேன் என்றார்.

தொடக்கத்தில் பரபரப்பாக புவனேஷ்வர் குமார் பந்துகளை ஏகப்பட்ட ஸ்விங் செய்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் ஓவர் 3-வது பந்திலேயே டீன் எல்கர் 0-வில் புவனேஷ்வரின் அருமையான அவுட்ஸ்விங்கருக்கு சஹாவிடம் கேட்ச் ஆனார். மார்க்ரம் ஒரு நல்ல வீரர் அவரை எடுத்தது பெரிய விஷயம், அவருக்கு புவனேஷ்வர் குமார் தொடர்ந்து குட் லெந்த்தில் நல்ல எழுச்சியுடன் அவுட்ஸ்விங்கர்களாக வீசிவந்தார், ஆனால் திடீரென ஒரு பந்தை உள்ளே ஸ்விங் செய்ய பந்து சறுக்கிக் கொண்டு அவரது பேடைத் தாக்கியது. கள நடுவர் அவுட் என்றார். உண்மையில் பந்து பிட்ச் ஆனது ஸ்டம்ப் திசைக்கு வெளியேதான், பந்து ஸ்டம்பை அடிக்கும் என்றாலும் நடுவர் தீர்ப்பு அவுட் என்பதால் அது அவுட்தான்.

ஹஷிம் ஆம்லா 3 ரன்கள் எடுத்து ஆடாமல் விட வேண்டிய புவனேஷ்வர் லேட் அவுட் ஸ்விங்கரை தொட்டார் கெட்டார்.புவனேஷ்குமாரின் பரபரப்பு ஸ்விங் பவுலிங்கினால் தெ.ஆ. 12/3 என்று ஆனது.

12/3 என்ற நிலையில் டிவில்லியர்ஸ் சில பந்துகள் நிதானித்தார். ஆனால் திடீரென புவனேஷ்வர் குமார் தன் லெந்தில் பிழை செய்ய அவரை ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை ஆஃப் திசையில் விளாசினார். இது திருப்பு முனையாக அமைந்தது.

மொகமது ஷமி மிகுந்த ஏமாற்றமளித்தார். 9 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்ததல்ல, அவரது லெந்த் நன்றாக அமையவில்லை, டிவில்லியர்ஸ் இவரது ஒரு பந்தை படு அலட்சியமாக ஒரு புல்ஷாட் பவுண்டரி அடித்தாரே பார்க்கலாம், கிளாஸ் ஷாட், உணவு இடைவேளைக்கு முன்னதான சிறந்த ஷாட் ஆகும் இது.

ஜஸ்பிரித் பும்ரா மிகப் பிரமாதமாக வீசினார். டிவில்லியர்ஸுக்கு சற்று இவரை ஆடுவது சிரமமாகவே இருந்தது, இன்ஸ்விங்கர்கள் கடுமையாக ஸ்விங் ஆக அவரது உடலை வெட்டிச் செல்லுமாறு பந்துகள் உள்ளே சென்றன. பும்ரா யார்க்கர் லெந்த் இன்ஸ்விங்கரில் ஒருமுறை டுபிளெசிஸ் கீழே விழுந்தார்.

ஷமியின் ஒரு பந்து எட்ஜ் ஆக டுபிளெசிஸ், விராட் கோலியின் நேர்மையினால் தப்பினார். ஆஸ்திரேலியர்களாக இருந்தால் அது கேட்ச்தான் என்று கத்தி ஊரைக் கூட்டியிருப்பார்கள், ஆனால் களத்தில் பட்டு வந்திருக்கலாம், தெரியவில்லை என்பது போல் விராட் கோலி செய்கை செய்ய 3-வது நடுவர் அவுட் இல்லை என்று உறுதி செய்தார், பும்ராவை முதல் பவுண்டரி அடித்த டுபிளெசிஸ் அதிர்ஷ்டவசத்தால் பவுண்டரி சென்றதை உணர்ந்திருப்பார், நன்றாக எழும்பிய பந்து டுபிளெசிஸ் மட்டை மேல் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பின்னால் பவுண்டரி ஆனது.

டிவில்லியர்ஸ் ஒருமுறை ஷமி பந்தை பிரென்ச் கட் செய்தார், ஸ்டம்புக்கு அருகில் பவுண்டரி சென்றது, கடைசியில் ஷமி பந்தை பளார் என்று அறைந்து அரைசதம் பூர்த்தி செய்தார்.

டுபிளெசிஸ், டிவிலியர்ஸ் இணைந்து 95 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர், இதில் 18 பவுண்டரிகள். இந்திய வீச்சாளர்கள் அதிகம் பவுண்டரி பந்துகளை வீசினர். முதல் பரபரப்புக்குப் பிறகு வழக்கம் போல் அயல்நாட்டுப் பிட்சில் ரன்களைக் கொடுப்பதுதான் உண்மையில் நடந்தது.

3 விக்கெட் போனவுடனேயே அஸ்வினை ஒரு முனையில் கொண்டு வந்து நெருக்கியிருக்கலாம், ஆனால் ஏனோ, தோனியும் சரி, கோலியும் சரி அஸ்வினை குறைவாகவே எடை போடுகின்றனர், ஸ்மித் எப்படி லயனை பயன்படுத்துகிறாரோ அவ்வாறு அஸ்வினை கோலி பயன்படுத்த வேண்டும். அஸ்வினுக்கு ஒரு ஓவர் கூட இன்னும் கொடுக்கவில்லை, பாண்டியாவின் ஒரு ஓவரில் ஒன்றுமில்லை. பும்ரா பந்து வீச்சில் ஒரு அச்சுறுத்தல் இருக்கிறது. ஷமி இன்னும் மேம்பட வேண்டும், கோலி, அஸ்வினை பயன்படுத்த வேண்டும்.

மற்றபடி முதல் செஷனில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம் என்றுதான் கூற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x