Published : 11 Oct 2023 02:51 PM
Last Updated : 11 Oct 2023 02:51 PM

ODI WC 2023 | “அகமதாபாத்தில் இந்தியாவை வீழ்த்தும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது” - வாசிம் அக்ரம்

அகமதாபாத்: 1992-ல் முதன் முதலாக உலகக் கோப்பையில் சந்தித்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஆடிய 7 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இந்திய அணிதான் பந்தாடியுள்ளது. ஆனால் பாபர் அஸம் தலைமையிலான அணி இந்த முறை அகமதாபாத்தில் இந்திய அணியை வீழ்த்தும் என்று முன்னாள் சுல்தான் ஆஃப் ஸ்விங் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமையன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது.

நேற்று இலங்கையின் 345 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக பாகிஸ்தான் விரட்டியதால் பாகிஸ்தான் அணி முகாமில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் ததும்புகிறது. வெற்றிக்கு மத்தியில் பாகிஸ்தான் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பீல்டிங் படுமோசம். அன்று விராட் கோலிக்கு மிட்செல் மார்ஷ் கேட்ச் விட்டு என்ன ஆனது என்பதைப் பார்த்தோம். அதேபோல் நேற்று இமாம் உல் ஹக், குசல் மெண்டிஸுக்கு கேட்சை விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதையும் பார்த்தோம். நிலைமை இப்படி இருக்கையில், போட்டிக்கு முன்னதாகவே உதார் விடும் பாகிஸ்தான் பலவீனங்களை முதலில் சரி செய்ய வேண்டும்.

நேற்று இலங்கையில் இளம் பதிரனாவோ, மற்றவர்களோ வீசியது போல் இந்திய அணியின் பவுலிங் நிச்சயம் இருக்காது. பீல்டிங்கில் இந்திய அணி, சிறந்த அணி இல்லை என்றாலும் பாகிஸ்தானை ஒப்பிடுகையில் உண்மையில் நல்ல பீல்டிங் அணிதான். மேலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம், ஏதோ போர்க்களத்தில் நிற்பது போல் பீதியுடன் முழிக்கிறார். அவரது பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒருவேளை இந்தியாவுக்கு எதிராக அவர் ஃபார்முக்கு வந்துவிட்டால் அது இந்தியாவுக்குக் கஷ்டம்தான். இந்தியாவுக்கு எதிராக அபாயகர வீரர் யார் என்றால், அது ரிஸ்வான் தான். ரிஸ்வான் உண்மையில் பாகிஸ்தான் அணியின் போராளி.

அவர் இலக்கை விரட்டும் போது தோனி போல் அனாயசமாக கவலைப்படாமல் ஜாலியாக சிரித்தபடியே ஆடி விரட்டுகிறார். பிரஷர் ஆவதில்லை. இன்னொரு கூல் விக்கெட் கீப்பர்/பேட்டராக இருக்கிறார் ரிஸ்வான்.

நிலமைகள் வேறுமாதிரியாக இருக்க, முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணி இந்திய அணியை அகமதாபாத்தில் வீழ்த்தும் திறன் கொண்டது என்று கூறியிருக்கிறார். ”இரு அணிகளும் 7 முறை உலகக் கோப்பைகளில் எதிர்த்து ஆடியுள்ளன. ஆனால் அண்டை நாடு (இந்தியா)அடிக்கடி 7-0 என்று நமக்கு (பாகிஸ்தானுக்கு) சொல்லியபடியே, நினைவூட்டியபடியே இருக்கின்றது. ஆனால் இத்தனை நீண்ட தோல்விக்கு நான் ஒரு காரணத்தைக்கூட தனியாக எடுத்துப் பேச முடியவில்லை” என்றார் வாசிம் அக்ரம்.

வாசிம் அக்ரம்: “1996ம் ஆண்டு பெங்களூரில் தோற்றது நரகம்தான். யாரும் அந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் அந்தப் போட்டி முடிந்து பாகிஸ்தான் திரும்பிய போது பலத்த பாதுகாப்புடன் வந்தோம். சில பல நாட்களுக்கு எங்கள் வீட்டிற்கே நாங்கள் செல்ல முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தொடர் தோல்வி என்னும் சங்கிலி உடைக்கப்படும். பாகிஸ்தான் அணி அதைச் செய்யும் திறமை கொண்டதே. உலகக் கோப்பை டி20-யில் அதைச் செய்து காட்டினோம். இப்போது 50 ஓவரிலும் செய்து காட்ட முடியாது என்பதற்கு ஒன்றுமில்லை” என்றார் வாசிம் அக்ரம்.

முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறும்போது, “இந்திய அணி எங்களைவிட இந்த 7 போட்டிகளிலும் பிரஷர் சூழ்நிலைகளை திறமையாகக் கையாண்டிருக்கலாம். பிறகு டாஸ்களில் இந்திய அணி வென்றதும் சாதகமான அம்சம்தான்.” என்றார்.

2011 உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றதைப் பற்றி அப்போதைய கேப்டன் ஷாகித் அப்ரீடி கூறும்போது, “உள்ளபடியே கூற வேண்டுமென்றால் நாங்கள் ஏன் தோற்றோம் என்று எனக்குத் தெரியவில்லை. அரையிறுதி வரை அருமையாக ஆடி வந்தோம். ஆனால், மொஹாலியில் சோடை போனோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x