Published : 11 Oct 2023 06:17 AM
Last Updated : 11 Oct 2023 06:17 AM

754 ரன்கள் குவிக்கப்பட்ட டெல்லியில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இன்று மோதல்

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் கூட்டாக 754 ரன்கள் வேட்டையாடப் பட்டிருந்தது.

இதனால் இந்திய அணியும் ரன் வேட்டை நிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷுப்மன் கில், டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடையாததால் இந்த ஆட்டத்திலும் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து இருந்தனர். இதில் இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மேற்கொண்ட ஷாட்கள் அணிக்கு பின்னடைவை கொடுத்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள், கவனமுடன் செயல்படக்கூடும்.

அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு தாக்குதலுடன் ஒப்பிடும் போது ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சு பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்காது என்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சீராக ரன்கள் சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். கடந்த ஆட்டத்தில் 31 சிக்ஸர்கள் விளாசப்பட்டிருந்தது. இதற்கு மைதானத்தின் அளவு சிறியதாக இருந்ததும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த சாதகத்தை இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சேப்பாக்கம் மைதானத்தில் கே.எல்.ராகுலுடன் இணைந்து அற்புதமாக பேட்டிங் செய்த சேஸ் மாஸ்டர் விராட் கோலிக்கு, அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கக்கூடும். ஏனெனில் இங்குள்ள பெவிலியனுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் முன்பு பேட்டிங் செய்யும் கோலி, தனது ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் மீண்டும் ஒரு சிறந்த மட்டடை வீச்சை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை தொடரில் இருந்து பேட்டிங்கில் பிரதான பங்களிப்பை வழங்கி வருகிறார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த அவர், உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி 97 ரன்கள் விளாசி இந்திய அணி வெற்றிக் கோட்டை கடக்க பெரிதும் உதவியிருந்தார்.

அணி நிர்வாகம் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி வரும் கே.எல்.ராகுலிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி விளையாடும் லெவனில் இடம்பெறக்கூடும்.

ஆப்கானிஸ்தான் அணியானது தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக156 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான தோல்வியை சந்தித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 83 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் மேற்கொண்டு 73 ரன்களை சேர்ப்பதற்குள் 8 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்திருந்தது.

இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர ஆப்கானிஸ்தான் அணி முயற்சிக்கக்கூடும். பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியின் பலமே வலுவான சுழற்பந்து வீச்சுதான். இருப்பினும் உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியாக வேண்டும்.

வங்கதேச அணிக்கு எதிராக ரஹ்மனுல்லா குர்பாஸ் மட்டுமே பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். அனைத்து பேட்ஸ்மேன்களும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x