Published : 10 Jul 2014 04:53 PM
Last Updated : 10 Jul 2014 04:53 PM

இங்கிலாந்தில் இந்திய ஆட்டக்களம்’ : டிரெண்ட் பிரிட்ஜ் பிட்ச் அமைப்பாளர் மன்னிப்பு

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டிக்காக அமைக்கப்பட்ட பிட்ச் பற்றி இங்கிலாந்து வீரர்களிடையே அதிருத்தி எழுந்துள்ளது. இந்தியாவிற்காக இந்தியாவில் இருப்பது போல பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்கள் எழவே பிட்ச் தயாரிப்பாளரான ஸ்டீவ் பர்க்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிட்சில் பந்துகளில் வேகம் இல்லை, ஸ்விங்கும் இல்லை. ஒன்றுமேயில்லை என்று ஆண்டர்சன் போன்ற வீச்சாளர்கள் கூறியுள்ளனர். 5 நாட்கள் நல்ல கேட் கலெக்‌ஷன் வர வேண்டும் என்பதற்காக பிட்ச் அமைக்கப்பட்டதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பஞ்சு மெத்தை ஆட்டக்களம் இங்கிலாந்தில் எப்போதும் அமைக்கப்பட மாட்டாது. காரணம் அங்கு பிட்ச் அமைப்பாளர்களை அணியின் கேப்டன் நிர்பந்தம் செய்ய முடியாது. ஓரளவுக்கு பிட்ச் கியூரேட்டர்கள் சுதந்திரமாகவே அங்கு செயல்படுவர். மேலும் பேட், பந்து இரண்டுக்கும் சவாலான போட்டி இருப்பதை அவர்கள் விரும்புவார்கள்.

ஆனால் நேற்றைய பிட்சில் புல் இருந்ததற்கான அறிகுறி கூட இல்லை. பேட்டிங் ஆட்டக்களமாக இருந்ததாலேயே தோனி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஜோகன்னஸ்பர்கிலும் பேட்டிங் தேர்வு செய்தாரே என்று கேட்கலாம், ஆனால் முதல் நாள் பிட்சில் ஈரப்பதம் கொஞ்சம் இருந்ததால் பந்துகள் அவ்வளவாக பவுன்ஸ் ஆகாது. ஸ்விங்கும் இருக்காது. பிட்ச் வெயிலில் காயக்காய வேகம்பிடிக்கும். ஆகவே அங்கு பேட்டிங் எடுத்ததும் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்ததால்தான்.

2011ஆம் ஆண்டு இந்திய அணி 0-4 என்று தோற்றதற்குக் காரணம் பிட்சில் பவுன்ஸ் இருந்ததும், பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆனதுமே. இந்த முறை முதல் நாள் பிட்சிலேயே இவற்றைக் காண முடியவில்லை.

வர்ணனை செய்துகொண்டிருந்த வாசிம் அக்ரம், "பந்தில் வேகமும் இல்லை, பிட்சில் பவுன்சும் இல்லை, ஆட்டத்தில் எதுவும் நடக்கவும் இல்லை” என்றார்.

80 ரன்கள் அடித்த பிறகும் கூட மட்டையான இந்த பிட்சில் லியாம் பிளங்கெட் வீசிய ஷாட் பிட்ச் பந்தில் லேசாக அடிவாங்கினார் என்றால் உயிரோட்டமுள்ள பிட்சில் அவர் அரைசதம் அடிக்க மிகுந்த சிரமப்பட்டிருப்பார் என்பதே உண்மை.

இந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிட்ச் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்:

”இந்தப் பிட்சில் ஆடுவது வெறுப்பாக உள்ளது, இப்போது ஒன்றும் செய்ய முடியாது, மீதமுள்ள 6 விக்கெட்டுகளை வீழ்த்துவது எப்படி என்பதில் எனது கவனம் உள்ளது.

பிட்ச் தயாரிப்பாளர் ஸ்டீவ் பர்க்ஸ் கூறுகையில், "உயிரோட்டமுள்ள பிட்சையே தயாரிக்க நினைத்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு அமையவில்லை, பிட்சிற்கு அடியே நிறைய ஈரப்பதம் உள்ளது இதனால்தான் பந்துகளில் வேகம் இல்லை. வெயில் பட்டு பிட்ச் கொஞ்சம் காயத் தொடங்கினால் மாற்றம் ஏற்படலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x