

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. அவர், களமிறங்காத பட்சத்தில் தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்கக்கூடும்.
உலகக் கோப்பை கிரிக்கெட்தொடரில் இந்திய அணி தனதுமுதல் லீக் ஆட்டத்தில் நாளை (8-ம் தேதி), ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளையில் ஷுப்மன் கில்லை மருத்துவ குழுவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். அவர், விரைவில் குணமடைவார் என நம்புகிறோம். மருத்துவ குழுவின்கூடுதல் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வந்ததில் இருந்தே ஷுப்மன்கில்லுக்கு கடும் காய்ச்சல் இருந்து வருகிறது. அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது தெரிய வரும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க ஷுப்மன் கில்லுக்கு மீண்டும் டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், அது உறுதி செய்யப்பட்டால், அவர் ஓரிரு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கு 7 முதல் 10 நாட்கள் ஆகும். இருப்பினும் ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டால் குணமடைவதற்கான காலம் அதிகரிக்கும்.
ஷுப்மன் கில்லுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர், உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அல்ல.. 11-ம் தேதி நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம், 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஆட்டம் ஆகியவற்றிலும் பங்கேற்க முடியாது. ஷுப்மன் கில் இந்த சீசனில் 1,200 ரன்கள் குவித்துள்ளார். அவர், களமிறங்காத பட்சத்தில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இஷான் கிஷன் களமிறங்கக்கூடும்.