

தரம்சாலா: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை 10.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வங்கதேச அணி ஒருநாள் கிரிக்கெட்டில் கடும் போட்டி அளிக்கக்கூடிய அணியாகவே திகழ்ந்து வருகிறது. எனினும் அந்த அணி இந்த ஆண்டில் சீரற்ற திறனையே வெளிப்படுத்தி உள்ளது. 9 ஆட்டங்களில் தோல்வி, 8 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. கேப்டன் ஷகிப் அல் ஹசனுடன் முஸ்டாபிஸுர் ரஹ்மான், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் முஸ்பிகுர் ரகிம், லிட்டன் தாஸ், ஆல் ரவுண்டர் மஹ்மதுல்லா ஆகியோர் அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டவர்கள்.
சுழற்பந்து வீச்சில் ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன், நசம் அகமது ஆகியோர் இந்திய ஆடுகள தன்மையை பயன்படுத்திக் கொள்ளக்கூடும். வேகப்பந்து வீச்சில் முஸ்டாபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அமகது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மதுல்லா ஷாகிதி தலைமையில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன், ஹஸ்மதுல்லா ஷாகிதி ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ரஷித் கான், மொகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகியோர் வங்கதேச அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.