Published : 06 Oct 2023 04:10 AM
Last Updated : 06 Oct 2023 04:10 AM
திருவாரூர்: ஒலிப்பிக் போட்டியிலும் எனது மகன் தங்கப் பதக்கம் வென்று தருவார் என ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்ற ராஜேஷ் ரமேஷின் தாய் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தைச் சேர்ந்த அன்பழகன் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மூத்த மகன் ராஜேஷ் ரமேஷ். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற 4 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார். ராஜேஷ் ரமேஷ் 6-ம் வகுப்பு வரை பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார்.
சிறு வயது முதல் ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக திருச்சியில் உள்ள விளையாட்டு விடுதிக்கு தேர்வாகி, 7-ம் வகுப்பு முதல் விளையாட்டு விடுதியில் தங்கி பயின்றார். 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம் போன்றவற்றில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள ராஜேஷ் ரமேஷ், தற்போது, திருச்சியில் ரயில்வே டிக்கெட் கலெக்டராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சீனாவில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ராஜேஷ் ரமேஷ் பங்கேற்ற அணி, 400 மீட்டர் தொலைவு கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் பெற்று சாதனைபடைத்துள்ளது.
இந்த சாதனையில் ராஜேஷ் ரமேஷின் பங்கு முக்கியமானதாகும். ராஜேஷ் ரமேஷ் தங்கப்பதக்கம் வெல்லும் தருணத்தை வீட்டில் இருந்து பார்த்த அவரது தாய் தமிழ்ச்செல்வி, தந்தை அன்பழகன் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து ராஜேஷ் ரமேஷின் தாய் தமிழ்ச்செல்வி கூறியது: எனது மகனுக்கு சிறு வயதிலிருந்தே விளையாட்டின் மீது இருந்த தீராத ஆசைதான் இந்த வெற்றியை பெற வைத்துள்ளது. இதற்காக அவன் கடுமையாக உழைத்துள்ளான். பண்டிகை நாட்கள், வீட்டு விசேஷங்களுக்கு கூட வராமல் விளையாட்டு விடுதியிலேயே தங்கியிருப்பான்.
அப்போது எங்களுக்கு கவலையாக இருந்தது. தற்போதுமகிழ்ச்சியாக உணர்கிறோம். நிச்சயம் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று, எனது மகன் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுப்பார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT