

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (அக்.5) அன்று இந்தியா சார்பில் வில்வித்தை, ஸ்குவாஷ் மற்றும் மல்யுத்த விளையாட்டில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்தியா 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் வென்று 86 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளது.
வில்வித்தை மகளிர் காம்பவுண்டு பிரிவு: இதில் இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி பர்னீத் கவுர், ஜோதி சுரேகா மற்றும் அதிதி கோபிசந்த் அடங்கிய இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். 230 ஸ்கோருடன் இந்தியா தங்கத்தை வென்றது.
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்: தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர்பால் சிங் சந்து இணையர் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவை வீழ்த்தி தங்கம் வென்றனர்.
வில்வித்தை ஆடவர் காம்பவுண்டு பிரிவு: அபிஷேக், ஓஜஸ் மற்றும் பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது. 235 ஸ்கோருடன் இந்தியா இந்த பதக்கத்தை வென்றது.
ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி: ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெள்ளி வென்றார்.
மல்யுத்தம்: மகளிர் 53 கிலோ மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஆண்டிம் பங்கல்.