Published : 05 Oct 2023 09:15 AM
Last Updated : 05 Oct 2023 09:15 AM

ODI WC 2023 | என்ன சொல்கிறார்கள் கேப்டன்கள்?

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

ரோஹித் சர்மா - இந்தியா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு கேப்டனும் தங்கள் நாட்டிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறார்கள். இது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இது அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு சிறந்த உலகக் கோப்பை தொடராக இருக்கும்.

பாட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா: உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போதெல்லாம், பெரிய அளவிலான போட்டிகள் நடைபெறுவதில்லை. மேலும் உலகில் உள்ள பாதிபேர் இந்த போட்டியைக் காண விரும்புகின்றனர். இது அந்த தருணங்களில் ஒன்றுபோல எனக்குத் தெரிகிறது. ரசிகர்கள் அந்தப் போட்டியில் தனிப்பட்ட முறையில் ஈடுபடவில்லை என்றாலும், அதைப் பார்க்கவும், வர்ணனைகளைக் கேட்கவும், போட்டியைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து கேட்கவும் ஆர்வமாகவும் இருப்பார்கள்.

ஷாகிதி - ஆப்கானிஸ்தான்: எங்களுக்கு அதிக ரசிகர்கள் ஆதரவு உண்டு. இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். எனவே, இங்குள்ள மைதானங்களிலும் அதேபோன்றே கூட்டம், ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களிடம் நல்ல தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இங்குள்ள ஆடுகளங்களின் நிலைமை எங்களுக்கு ஏற்றவாறு உள்ளது. நாங்கள் தரமான பேட்டிங்கை கொண்டுள்ளோம் என்பதை உலகுக்குச் சொல்வோம். எங்களால் நன்றாக விளையாட முடியும். மிகச் சிறப்பான கிரிக்கெட்டைத் தரமுடியும் என்று கிரிக்கெட் உலகுக்கு அறிவிப்போம்.

தெம்பா பவுமா - தென் ஆப்பிரிக்கா: எங்கள் அணியில் உள்ள வீரர்கள் மட்டும் இல்லை, எல்லா அணிகளிலும் உள்ள பல வீரர்கள் இந்தியாவில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இங்கு, அவர்கள் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். எனவே இது சாதகம் என்று சொல்ல மாட்டேன். அந்த அனுபவமும், ஆட்ட நுட்பமும் உள்ளவர்கள் அதை தங்கள் குழுவுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது உத்திகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் பயன்படுத்தலாம். ஆனால் இது ஒரு அணியாக எங்களுக்கு தனித்துவமான சாதகமான விஷயம் என்று நான் மாட்டேன்.

ஷகிப் அல் ஹசன் - வங்கதேசம்: உலகக் கோப்பை போட்டிக்காக நாங்கள் நன்றாக தயாராகிவிட்டோம் என்று நினைக்கிறேன். இப்போது எங்கள் அணியின் திறனை உலகுக்குக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்கள் அணி அதற்குத் தயாராக உள்ளது, நாங்கள் முந்தைய உலகக் கோப்பைகளில் விளையாடியதை விட சிறப்பாக விளையாடுவோம் என்று எங்களது நாடு சிறிது அதிகமாக எதிர்பார்க்கிறது.

ஸ்காட் எட்வர்ட்ஸ் - நெதர்லாந்து: உலகக் கோப்பை தொடரில் எங்களுக்கு அனைத்து ஆட்டங்களும் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதல் ஆட்டத்தில் நாங்கள் பாகிஸ்தானுடன் மோதுகிறோம். அவர்கள், மிகச்சிறந்த அணி. இந்த ஆட்டத்தை விளையாட நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.

தசன் ஷனகா - இலங்கை: எங்களுக்கு இது உற்சாகமான நேரம். நாங்கள் சமீப காலமாக காயங்களுடன் நிறைய போராடி வருகிறோம், ஆனால் அதே நேரத்தில், எங்களிடம் சில நல்ல சாதனைகளும் உள்ளன. ஒரு குழுவாக, நாங்கள் உலகக் கோப்பையை எதிர்நோக்குகிறோம். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட நாங்கள் வந்துள்ளோம்.

ஜாஸ் பட்லர் - இங்கிலாந்து: 2015-ம் ஆண்டு முதலே எங்கள் அணி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கிலாந்தில், இளம் வீரர்கள் ஒரு குறிப்பிட்ட வழியைத் தேர்வு செய்து விளையாடுகிறார்கள். மேலும் அந்த விளையாட்டு பாணியைத் தொடர உறுதியுடன் இருக்கின்றனர். இது எங்களது வெற்றிக்கான சிறந்த வாய்ப்பைத் தருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். தொடரில் மற்ற அணிகள் எங்களை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மேலே செல்ல முயற்சிக்கும். ஆனால் நாங்கள் மேலே இருப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்வோம்.

பாபர் அஸம் - பாகிஸ்தான்: இந்தியாவில் நாங்கள் நல்ல விருந்தோம்பலைப் பெற்றோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மக்கள் எங்களுக்கு அளித்த மரியாதை ரசிக்கும்படி இருந்தது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். நாங்கள் ஹைதராபாத்தில் ஒரு வாரமாக தங்கி இருக்கிறோம். ஹைதராபாத் என்பதால் அது நாங்கள் இந்தியாவில் இருப்பது போலவே இல்லை. நாங்கள் வீட்டில் இருப்பது போல் இருக்கிறது. இது எங்களுக்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு. எனவே, அனைவரும் 100 சதவீதம் பங்களிப்பைக் கொடுத்து போட்டியை ரசிக்க வைக்க விரும்புகிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x