

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் உட்பட 3 பேர் தங்கப் பதக்கம் வென்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அனஸ் முகமது யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வாரியதோடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, பந்தய தூரத்தை 3:01.58 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றது.
இதில் ராஜேஷ் ரமேஷ் தமிழகத்தின் திருச்சி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர், திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்வித்தையில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜாஸ் டியோடலே ஜோடி, தென்கொரியாவின் சோ சேவோன், ஜூ ஜாஹூன் ஜோடியை 159-158 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பேய்ன்ஸ்,பந்தய தூரத்தை 2:03.75 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவுகுத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் 0-5 என்ற கணக்கில் சீனாவின் லி குயனிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஷ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:27.85 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில் வித்யா ராம்ராஜ் தமிழகத்தின் கோவை பகுதியையும், சுபா வெங்கடேசன் திருச்சி பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பந்தய தூரத்தை 13:21.09 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
மல்யுத்தத்தில் ஆடவருக்கான கிரகோரோமன் 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுனில் 2-1 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் அட்பெக் அசிஸ்பேகோவ்வை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான குத்துச்சண்டையில் 54-57 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் பிரவீன் ஹூடா0-5 என்ற கணக்கில் சீன தைபேவின் லின் யு டிங்கிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஸ்குவாஷில் கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் அனகத் சிங், அபய் சிங் ஜோடி 1-2 என்ற கணக்கில் மலேசியா ஜோடியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது. 35 கிலோ மீட்டர் நடை பந்தயம் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மஞ்சு ராணி, ராம் பாபூ ஜோடி பந்தய தூரத்தை 5 மணி நேரம் 51 நிமிடங்கள் 14 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது.
ஹாக்கியில் இறுதிப் போட்டிக்கு.. ஆடவர் ஹாக்கி அரை இறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அமித் ரோஹிதாஸ், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் இந்தியா அதிகபட்சமாக 2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 70 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆனால் தற்போது ஹாங்சோ போட்டியில் இன்னும் மூன்று நாட்கள் போட்டி எஞ்சியுள்ள நிலையில் தற்போதே இந்தியா 81 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.