

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவை ஹைதராபாத்தில் திங்கள்கிழமை சந்தித்தார். இதையடுத்து சானியாவின் டென்னிஸ் அகாடமிக்கு தெலங்கானா அரசு ரூ. 1 கோடி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரசேகர ராவை சந்தித்த பின்னர் சானியா செய்தியாளர்களிடம் கூறியது: இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தெலங்கானா முதல்வரான சந்திரசேகர ராவுக்கு வாழ்த்து தெரிவிக்கவே இங்கு வந்தேன். டென்னிஸ் அகாடமி, விளையாட்டு துறையை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். முதல்வர் பல்வேறு ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்வதில் மும்முரமாக இருப்பதால், இது குறித்து பேச நாளை (இன்று) வருமாறு கூறியுள்ளார். ஆதலால்,செவ்வாய்கிழமை இது குறித்து மீண்டும் பேச உள்ளோம் என சானியா மிர்சா தெரிவித்தார்.
விரைவில் யு.எஸ். ஓபெனில் கலந்து கொள்ள உள்ள சானியாவிற்கும், அவரது டென்னிஸ் அகாடமிக்கும், முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ. 1 கோடி வழங்க உள்ளார். இதற்கான காசோலையை சந்திரசேகர ராவ் சானியாவிடம் செவ்வாய்க்கிழமை நேரடியாக வழங்குவார் என்று தெலங்கானா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.