

புதுடெல்லி: வரும் வியாழன் (அக். 5) அன்று தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தான் இடம் பெறாதது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சஹல் பேசியுள்ளார். தற்போது அவர் இங்கிலாந்தில் கென்ட் கவுன்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.
“உலகக் கோப்பை தொடர் என்பதால் அணியில் 15 பேர் மட்டுமே இடம் பெற முடியும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அணியில் இடம்பெறாதது கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால், நான் கடந்து வந்து விட்டேன். எனக்கு இது பழகிவிட்டது. ஏனெனில் 3-வது முறையாக உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறவில்லை.
அதனால் தான் இப்போது இங்கு வந்துள்ளேன். எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும். அது எங்கு வேண்டுமானாலும் நடக்கட்டும் என வந்துள்ளேன். எனக்கு இங்கு சிவப்பு பந்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நான் கவனம் செலுத்தி, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் எனது கவனத்தை வைக்கிறேன். இது நல்ல அனுபவமாக எனக்கு இருக்கும் என கருதுகிறேன்” என சஹல் தெரிவித்துள்ளார்.