

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் தடகள போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்டோபர் 1, ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்று அசத்தினார். 8 நிமிடம் 19.54 வினாடிகளில் இலக்கை கடந்து பதக்கம் வென்றார்.
அதேபோல குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர் பால் சிங் தூர் தங்கம் வென்றுள்ளார். 20.36 மீட்டர் தூரம் குண்டை எறிந்து தங்கத்தை தணதாக்கி கொண்டுள்ளார். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தஜிந்தர் சிங் இதே குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்களான அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கமும் ஜின்சன் ஜான்சன், வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹ்ரமிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். 1982-ம் ஆண்டுக்குப்பிறகு ஆசிய விளையாட்டு போட்டியில் தடகள ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது. இந்தியா இதுவரை 13 தங்கம்,18 வெள்ளி, 18 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 49 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தில் உள்ளது.