Asian Games 2023 | பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி!

Asian Games 2023 | பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் ஸ்குவாஷ் அணி!

Published on

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் ஆணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.30, சனிக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றுள்ளனர். தடகள பிரிவில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆல்ட்ரின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக் குழு பிரிவில் சரப்ஜோத் மற்றும் திவ்யா வெள்ளி வென்றனர்.

கோல்ஃப் - மகளிர் ரவுண்ட் 3-ல் ஆதீதி முதலிடம் பிடித்தார். குத்துச்சண்டையில் பிரீத்தி, லவ்லினா மற்றும் நரேந்தர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். கலப்பு இரட்டையர் டென்னிஸில் சீன தைபேவின் ஷூவோ லியாங் மற்றும் ஹூவாங் இணையை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது ரோஹன் போபண்ணா மற்றும் ருத்துஜா போஸ்லே இணை. 2-1 என்ற செட் கணக்கில் இந்த இணை வெற்றி பெற்றது.

ஸ்குவாஷ்: ஸ்குவாஷ் போட்டியின் முதல் ஆட்டத்தில் மகேஷ் மங்கோன்கர் தோல்வியடைந்தார். அடுத்து நடந்த இரண்டு போட்டிகளிலும் இரண்டு வீரர்களும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. அடுத்து களமிறங்கிய இந்தியாவின் அனுபவம் வாய்ந்த ஸ்குவாஷ் வீரரான சவுரவ் கோஷல், பாகிஸ்தான் வீரரான முஹம்மது ஆசிமை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அபய் சிங் முதல் செட்டில் வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த செட்களில் தோல்வியடைந்தார்.

இந்தியாவுக்கு தங்கம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கடைசி இரண்டு செட் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுகொடுத்துள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அபய் சிங் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மொத்தமாக 10 தங்கம் உள்பட 36 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in