

மும்பை: உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் ‘யார்? யார்?’ என்ற விவரத்தை போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புக்கு உயிர் சேர்ப்பதே இவர்களது பேச்சு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் களமாடிய நீண்ட அனுபவம் கொண்ட வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 10 நாடுகளை சேர்ந்த, தமிழ் உட்பட 9 மொழிகளில் பேசுகின்ற வர்ணனையாளர்கள் இந்த முறை போட்டிகளை வர்ணனை செய்ய உள்ளனர். இதில் இந்தியாவுக்காக உலகக் கோப்பை தொடரில் விளையாடியவர்கள், சாம்பியன் பட்டம் வென்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
வர்ணனையாளர்கள் குழு: ரிக்கி பாண்டிங், மோர்கன், வாட்சன், லிசா ஸ்தாலேக்கர், ரமிஸ் ராஜா, ரவி சாஸ்திரி, ஆரோன் ஃபின்ச், சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன், நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், வக்கார் யூனிஸ், ஷான் பொல்லாக், அஞ்சும் சோப்ரா, அதர்டன், சைமன் டவுல், எம்புமெலெலோ எம்பாங்வா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தினேஷ் கார்த்திக், சுப்ரமணியம் பத்ரிநாத், அதர் அலி கான், ரஸ்ஸல் அர்னால்ட், ஹர்ஷா போக்லே, காஸ் நைடூ, மார்க் நிக்கோலஸ், நடாலி ஜெர்மானோஸ், மார்க் ஹோவர்ட், இயன் வார்டு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.