

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதுக்கான (கோல்டன் பால்) இறுதிப்பட்டியலில் பிரேசிலின் நெய்மர் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர்.
அர்ஜென்டீனா தரப்பில் கேப்டன் லயோனல் மெஸ்ஸி, ஜேவியர் மாஸ்கெரனோ, ஏஞ்சல் டி மரியா ஆகியோரும், ஜெர்மனி தரப்பில் கேப்டன் பிலிப் லாம், தாமஸ் முல்லர், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மெஸ்ஸி 4 கோல்களையும், முல்லர் 5 கோல்களையும் அடித்துள்ளனர்.
கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த பிரேசில் வீரர் நெய்மர் 4 கோல்களை அடித்ததன் மூலம் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர்கள் தவிர இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் (6 கோல்கள்) கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் மற்றும் நெதர்லாந்தின் அர்ஜென் ராபன் ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் உருகுவேயின் டீகோ போர்லான் (2010), பிரான்ஸின் ஜினெடின் ஜிடேன் (2006), ஜெர்மனி கோல் கீப்பர் ஆலிவர் கான் (2002), அர்ஜென்டீனாவின் டீகோ மரடோனா (1986) ஆகியோர் தங்கப் பந்து விருதை வென்றுள்ளனர்.
தலைசிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதுக்கு கோஸ்டா ரிகா கோல் கீப்பர் கெய்லர் நவாஸ், ஜெர்மனியின் மானுவேல் நூயர், அர்ஜென்டீனாவின் செர்ஜியோ ரொமேரோ ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். சிறந்த இளம் வீரருக்கான விருது நெதர்லாந்தின் மெம்பிஸ் தேபே, பிரான்ஸின் பால் போக்பா, ரஃபேல் வரானே ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்த விருது அறிவிக்கப்படும்.