

ராஜ்கோட்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஆசிய கோப்பை தொடரின்போது அக்சர் படேல் காயமடைந்தார். அதனால், உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பிடிப்பாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். ஏனெனில், அனைத்து அணிகளும் ஐசிசி வசம் இறுதி செய்யப்பட்ட அணியை தெரிவிக்க வேண்டிய கெடு தேதி நெருங்கியுள்ளது.
இந்தச் சூழலில்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் முதல் இரண்டு போட்டிகளில் தனது திறனை நிரூபித்துள்ளார். இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் இடம் பிடிப்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
“அஸ்வினின் அனுபவம் மற்றும் அவரது அபார திறனை யாராலும் மறுக்க முடியாது. அவர் அபாரமாக பந்து வீசி உள்ளார். அதில் வேரியேஷனும் பெற்றுள்ளார். அது அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவர் அணியில் இடம் பெறும் வாய்ப்பு இருந்தால் அது நிச்சயம் பலன் தரும்” என ரோகித் தெரிவித்துள்ளார்.
நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இந்தப் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதற்காக கேப்டன் ரோகித் மற்றும் விராட் கோலி அணியில் இணைந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர்கள் விளையாடவில்லை.