

கொழும்பு: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. இது இலங்கைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
15 வீரர்கள் அடங்கிய அணியை அறிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரில் அவர் காயமடைந்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்கள் கைப்பற்றிய வீரராக அவர் ஜொலித்தார். காயம் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரிலும் பங்கேற்கவில்லை. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான குவாலிபையர் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருநந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் 7 போட்டிகளில் 22 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
இந்தச் சூழலில்தான் காயம் காரணமாக அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துனித் வெல்லலகே அணியில் இடம் பிடித்துள்ளார்.
இலங்கை அணி: தசுன் ஷனகா (கேப்டன்), குசல் மென்டிஸ் (துணை கேப்டன்), குசல் பெரேரா, பதும் நிசாங்கா, திமுத் கருணரத்னே, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா, மதீஷா பதிரானா, மதுஷங்கா.
உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி, அக்டோபர் 7-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியுடன் முதல் லீக் போட்டியில் விளையாயடுகிறது. அதற்கு முன்பா வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.