

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா தங்கப் பதக்கமும், மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மலாய்க்கா கோயல் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற பிந்த்ரா 205.3 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்றிருக்கிறார் பிந்த்ரா. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றபிந்த்ரா, இப்போது காமன்வெல்த்திலும் அதே பிரிவில் தங்கம் வென்று முத்திரை பதித்திருக்கிறார்.
பிந்த்ராவைவிட 3.2 குறைவாகப் பெற்ற வங்கதேசத்தின் அப்துல்லா பாகி (202.1 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இங்கிலாந்தின் டேனியல் ரிவர்ஸ் 182.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீரரான ரவிக்குமார் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.
முத்திரை பதித்த கோயல்
சர்வதேச தரவரிசையில் 15-வது இடத்தில் இருப்பவரான கோயல், 197.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபிரிவில் சிங்கப்பூர் வீராங்கனை ஷான் ஸீ டியோ 198.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், கனடாவின் டோரோத்தி லுத்விக் 177.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
16 வயதான கோயல் தகுதிச்சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்த நிலையில் இறுதிச்சுற்றில் அபாரமாக செயல்பட்டு தனது முதல் காமன்வெல்த் போட்டியிலேயே பதக்கம் வென்றுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் முதல் பதக்கத்தை கோயல் வென்ற அதேவேளையில், அவருடைய ரோல் மாடலும், முன்னாள் முதல் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் ஹீனா சித்து 7-வது இடத்தையே பிடித்தார்.
தகுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடித்த அவர், இறுதிச்சுற்றில் சொதப்பியதால் 4-வது சுற்றோடு வெளியேற நேர்ந்தது. அவர் 95.8 புள்ளிகளைப் பெற்றார். கடந்த காமன்வெல்த் போட்டியில் ஹீனா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதனால் இந்த முறை அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அவர் ஜொலிக்காமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
வேல்ஸ் வீரர் ரைஸ் வில்லியம்ஸ் சஸ்பெண்ட்
வேல்ஸ் அணியின் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டப் பந்தய வீரர் ரைஸ் வில்லியம்ஸ் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகியுள்ள ரைஸ் வில்லியம்ஸ், ஐரோப்பிய சாம்பியன் ஆவார். இவர் கடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.