Published : 25 Sep 2023 02:08 PM
Last Updated : 25 Sep 2023 02:08 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அபார அஸ்வின்!

கடந்த 6 ஆண்டுகளில் நேற்று இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் அஸ்வின் தனது 4-வது ஒருநாள் போட்டியையே ஆடியுள்ளார். ஒரு பெரிய பவுலரை இப்படி பயன்படுத்துவது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கைவந்த கலை என்பதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும்.

ஆனால் அஸ்வின் ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். நேற்று 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்துள்ளார் அஸ்வின்.

அஸ்வின் இடது கை பேட்டர்களுக்கு அபாயகரமான பவுலர் என்பதால் வார்னர் நேற்று அஸ்வினை ஒரு கட்டத்தில் வலது கையிலேயே ஆடினார். ரிவர்ஸ் ஷாட் அல்ல, வலது கை பேட்டர் போலவே கார்டு எடுத்து நின்று வலது கை வீரராகவே ஆடினார். அதாவது வலது கையில் ஆடி பவுண்டரியையும் அடித்தார், இவர் வலது கையில் ஆடுவதைப் பார்த்த அஸ்வின் லெக் திசையை வலுப்படுத்தினார், ஆனால் வார்னர் ரிவர்ஸ் ஷாட் ஆட முயற்சி செய்து கொண்டே இருந்தார், கடைசியில் அஸ்வினின் கேரம் பந்தில் எல்,பி. ஆகி 53 ரன்களில் வீழ்ந்தார்.

அஸ்வின் மேலும் ஜோஷ் இங்லிஷ் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால் மார்னஸ் லபுஷேனை பவுல்டு செய்தது அற்புதமான பந்து, லபுஷேன், எதிர்முனையில் வார்னர் வலது கையில் ஆடுவதைப்பார்த்து சற்றே கவனம் இழந்தார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் லபுஷேனும் அபாரமாக ஆடிவந்தார். இந்திய அணி 399 ரன்களை விளாச, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு மழை காரணமாக 33 ஒவர்களில் 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவர்களோ 28.2 ஓவர்களில் 217 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதுவே இந்திய அணிக்கு பெரிய எச்சரிக்கைதான். 28.2 ஓவர்களில் 217 ரன்களை எடுக்க முடிகிறது என்றால் நிச்சயம் இந்திய அணி பந்து வீச்சை கொஞ்சம் டைட் ஆக்க வேண்டும் என்று தெரிகிறது

பிரசித் கிருஷ்ணா ஆஸ்திரேலிய அணியை ஆட்டிப்படைத்தார், அடுத்தடுத்த பந்துகளில் ஷார்ட், ஸ்மித்தை வெளியேற்றினார். அஸ்வின் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தன் 4வது ஒருநாள் போட்டியில் ஆடினாலும் அருமையாக தன்னை நிரூப்பித்தார். ஆஸ்திரேலியா போன்ற தரமான அணிகளுக்கு எதிராக அஸ்வினை உட்கார வைத்து விட்டு சில்வண்டு பவுலர் செஹலை எடுப்பதெல்லாம் டூ மச் என்பதை நேற்று அஸ்வின் எடுத்துக் காட்டினார்.

இந்நிலையில் அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து வடிவங்களிலும் 48 ஆட்டங்களில் 144 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இப்போது லெஜண்ட் கும்ப்ளே 142 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அனில் கும்ப்ளே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 29 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 68 போட்டிகளில் 144 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, அனில் கும்ப்ளே 67 போட்டிகளில் 144 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கைப்பற்றியுள்ளார். ஹர்பஜன் சிங் 74 போட்டிகளில் 129 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 3ம் இடத்தில் உள்ளார். கிரேட் கபில் தேவ் 77 போட்டிகளில் 124 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4ம் இடத்தில் இருக்கின்றார். ரவீந்திர ஜடேஜா 78 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 128 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x