Published : 25 Sep 2023 01:37 PM
Last Updated : 25 Sep 2023 01:37 PM

தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை உடைத்த சிஎஸ்கே லெஜண்ட்!

சிஎஸ்கே அணியில் எம்.எஸ்.தோனியின் கேப்டன்சியில் ஆடிய தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், தல தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை உடைத்து சாதனை புரிந்துள்ளார்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனான இம்ரான் தாஹிர் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் தன் அணியை சாம்பியனாக்கி தோனியின் சாதனையை உடைத்தார். அதாவது 44 வயதில் இம்ரான் தாஹிர் டி20 லீக் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார். சிஎஸ்கே கடந்த ஐபில் தொடரின் சாம்பியன் ஆன போது கேப்டன் தோனியின் வயது 41. ஆகவே அவரை விட 3 வயது மூத்தவரான இம்ரான் தாஹிர் டி20 கோப்பையைக் கைப்பற்றி அதிக வயதில் கோப்பையை வென்று தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் முதல் கரீபியன் சாம்பியன்ஸ் லீக் டைட்டில் ஆகும் இது. கயானா புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது. டிரின்பாகோ அணிக்கு முன்னாள் மும்பை இந்தியன்ஸ் லெஜண்ட் கெய்ரன் போலார்ட் கேப்டன்.

டாஸ் வென்ற இம்ரான் தாஹிர் முதலில் கெய்ரன் போலார்ட் அணியான நைட் ரைடர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். ஆனால் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டிவைன் பிரிடோரியஸை ஆட முடியாமல் நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு கீச் கார்ட்டி என்ற வீரர் 38 ரன்களை எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18.1 ஓவர்களில் 94 ரன்களுக்குச் சுருண்டது.

டிவைன் பிரிடோரியஸ் 4 விக்கெட்டுகளை 26 ரன்களுக்குக் கைப்பற்ற, கேப்டன் இம்ரான் தாஹிர் 4 ஓவர் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆடிய கயானா அணியில் சயீம் அயூப் 52 ரன்களையும் ஷேய் ஹோப் 32 ரன்களையும் எடுக்க கயானா 14 ஓவர்களில் 99/1 என்று வெற்றி பெற்று முதன் முதலாக கரீபியன் பிரிமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது.

ஆட்ட நாயகனாக டிவைன் பிரிட்டோரியஸ் தேர்வு செய்யப்பட, தொடர் முழுதும் சிறப்பாகச் செயல்பட்ட ஷேய் ஹோப் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இம்ரான் தாஹிர் 2019 ஐபிஎல் தொடரில் பர்ப்பிள் கேப் வென்றார். இவர் சிபிஎல் 2023 தொடருக்கு முன்பாக கயானா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது கேப்டன்சியில் கயானா அணி 10 போட்டிகளில் 8-ல் வென்று சாதனையையே படைத்துவிட்டது. ஆனால் பிளே ஆப் முதல் ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது கயானா. ஆனால் இறுதிப் போட்டியில் இதே அணியை வீழ்த்தி பழிக்குப் பழி வாங்கியது கயானா.

இம்ரான் தாஹிர் தனது கடைசி ஐபிஎல் போட்டியை 2021-ல் ஆடினார். சிபிஎல் 2023-இல் இம்ரான் தாஹிர் 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தார். இறுதிப் போட்டியிலும் ஆந்த்ரே ரஸல், டிவைன் பிராவோ விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இம்ரான் தாஹிர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x