போட்டியில் இந்திய அணி
போட்டியில் இந்திய அணி

ஆசிய விளையாட்டுப் போட்டி | இந்தியாவுக்கு முதல் தங்கம்: 10மீ ஏர் ரைபிள் பிரிவில் ஆடவர் அணி உலக சாதனை

Published on

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

முன்னதாக நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற வீராங்கனைகள் இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கிவைத்தனர். தற்போது ஆடவர் அணி இந்தியாவுக்கான தங்கப் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

உலக சாதனை முறியடிப்பு: 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர்கள் ருத்ரான்க்‌ஷ் பாட்டீல், ஐஸ்வர்ய் பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் அடங்கிய குழு தங்கம் வென்றது. கூடவே, 1893.7 புள்ளிகள் பெற்று இப்போட்டியில் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன ஆடவர் குழு வீரர்கள் நிகழ்த்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

9 பதக்கங்கள்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள லோட்டஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை வண்ணமயான நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்தியா இன்று (செப்.25) தனது முதல் தங்கத்தை வென்றுள்ளது. மேலும் இன்று, துடுப்புப் படகு செலுத்துதல் போட்டி ( 4 பேர் கொண்ட அணி) பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் தனிநபர் போட்டியில் ஐஸ்வர்ய் தோமர் வெண்கலம் வென்றார். இதன்மூலம், இரண்டு நாட்களில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஆசிய விளையாட்டு பெரிய அளவிலான போட்டியாக திகழ்கிறது. 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போடடியில் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 655 பேர் பங்கேற்றுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in