இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும்: பாகிஸ்தான் பயிற்சியாளர் மொயின் கான்

இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும்: பாகிஸ்தான் பயிற்சியாளர் மொயின் கான்
Updated on
1 min read

கிரிக்கெட்டை எவ்வாறு நிர்வகிக்கவேண்டும், கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டுமென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் விக்கெட் கீப்பருமான மொயின் கான் கூறியுள்ளார்.

எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகையில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே இந்தியாவில் கிரிக்கெட் எவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது, வீரர்கள் எவ்வாறு மனரீதியாக உற்சாகப்படுத்தப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக ஐபிஎல் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கடும் சவால் நிறைந்ததாக மாறி வருகின்றன. இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களை சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள ஐபிஎல் போட்டிகள் மிகச்சிறந்த வாய்ப்பாக உள்ளது. இதன் மூலம் சர்வதேச தரத்தில் வீரர்கள் தயாராகிறார்கள்.

பதற்றம் நிறைந்த சூழ்நிலைகளிலும், கடினமான நிலையிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு நல்ல அனுபவம் வீரர்களுக்கு கிடைக்கிறது.

தற்போதைய உண்மை நிலவரம் என்ன என்பதை உணர்ந்து கொள்வதுடன் அதனை புரிந்துகொண்டு நடக்க முயற்சிப்பதுதான் நல்ல முடிவை எடுப்பதற்கான முதல் படி. நாம் கடினமாக உழைத்தால் மட்டுமே இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கு நம்மால் சவால் அளிக்க முடியும் என்று மொயின் கான் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியைப் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சூப்பர் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in