

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெயிக்வாட் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ஷுப்மன் கில் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
இதன்பின் மீண்டும் ஆட்டம் தொடங்கினாலும் கில், ஷ்ரேயஸ் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் திணறினர். இருவரும் நாலாபக்கமும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி ரன்களை குவித்தனர். அடுத்தடுத்து இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஷ்ரேயஸ் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமெடுத்து 105 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோல் ஷுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமெடுத்தவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 200 ரன்கள் சேர்ந்த நிலையில் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் 31 ரன்கள், கே.எல்.ராகுல் 52 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இதன்பின் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக, கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்த இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிரசித் கிருஷ்ணா ஆரம்பமே ஷாக் கொடுத்தார். மேதிவ் ஷாட் 9 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன் எடுக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன்பின் வார்னர் மற்றும் லபுஷேன் இணைந்து ஆடினர். ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்த சமயத்தில் மழை குறுக்கிட ஆட்டம் தடைப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் தடைப்பட்டதால் 33 ஓவர்களுக்கு 317 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. என்றாலும், 28.2 ஓவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.