2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இந்தூரில் இன்று மோதல்
இந்தூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன்மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் மொகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.
இதேபோன்று மட்டை வீச்சில் ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படும்பட்சத்தில் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி தொடரை கைப்பற்றக்கூடும். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக் கூடும். இன்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்குர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
போட்டி நடைபெறும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக இந்திய அணியானது நியூஸிலாந்துக்கு எதிராக 385 ரன்களை வேட்டையாடி இருந்தது. இந்த மைதானத்தின் எல்லைக்கோடுகள் அளவில் சிறியவை என்பதால் இன்றைய ஆட்டத்தில் ரன் வேட்டை நிகழக்கூடும். ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
