Published : 24 Sep 2023 05:17 AM
Last Updated : 24 Sep 2023 05:17 AM
ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள லோட்டஸ் மைதானத்தில் நேற்று வண்ணமயான நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பம் ஆகியவற்றின் கூறுகளை ஒருங்கிணைத்து கண்கவர் தொடக்க விழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விழாவில் தொழில்நுட்பம், சீனாவின் கலாச்சார வரலாறு மற்றும் கண்டத்தின் ஒற்றுமையின் உணர்வு ஆகியவை பிரதிபலித்தன.
'ஆசியாவில் அலைகள் எழுச்சியடைகின்றன' என்ற முக்கிய கருப்பொருளுக்கு ஏற்ப, தொடக்க விழாவில் புதிய சகாப்தத்தில் சீனா, ஆசியா மற்றும் உலகம் ஒன்றிணைவது, ஆசிய மக்களின் ஒற்றுமை, அன்பு ஆகியவை கண்கவர் நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டன. தொடக்க விழா நிகழ்ச்சிகளை காண மைதானத்தில் சுமார் 80,000 பேர் திரண்டிருந்தனர்.
வண்ணமயமான நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் விழா மேடையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் போட்டிக்கான தீபம் ஏற்றபட்டது. தொடர்ந்து சீன அதிபர் ஜி பின்பிங், ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குவதாக முறைப்படி அறிவித்தார்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். வரும் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 655 பேர் பங்கேற்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா 8-வது நாடாக வலம் வந்தது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைய்ன் ஆகியோர் இணைந்து தேசிய கொடியை ஏந்திச் சென்றனர். அவர்களுடன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 100 வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஆசிய விளையாட்டு பெரிய அளவிலான போட்டியாக திகழ்கிறது. 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போடடியில் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஹாங்சோ ஆசிய விளையாட்டில் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுபோட்டியானது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ளதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்தவீரர், வீராங்கனைகள் 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் 481 தங்கப் பதக்கங்களை வெல்ல கடுமையாக போராட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT