

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின்பிங் துவக்க விழாவில் கலந்துகொண்டார்.
முதலில் சீன பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் தேசிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடந்தது.
வீரர்கள், வீராங்கனைகள் தேசிய கொடி சுமந்துகொண்டு தங்கள் நாட்டை அறிமுகப்படுத்தினர். இந்தியா சார்பில் இந்திய தேசியக்கொடியுடன் லோவ்லினா மற்றும் ஹர்மன்பிரீத் சிங் அணிவகுப்பு நடத்தி இந்தியாவை அறிமுகப்படுத்தினர்.
அதேபோல் ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளை குறிப்பிடும் உருவ பொம்மைகள் துவக்க விழாவில் ஆடப்பட்ட அசத்தல் நடனம் கவனம் ஈர்த்தது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது. ஆனால் கரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இன்று தொடங்கும் போட்டியானது வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஹாங்சோ உள்ளிட்ட 5 பகுதிகளில் உள்ள 54 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் 481 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து 634 வீரர், வீராங்கனைகள் 38 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018-ம் ஆண்டு போட்டியில் 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆசிய விளையாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக அமைந்துள்ளதால் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
செஸ், இ-ஸ்போர்ட்ஸ், கபடி, காம்பவுண்ட் வில்வித்தை, பிரிட்ஜ், கிரிக்கெட், படகு போட்டி, ஸ்குவாஷ் ஆகிய 8 விளையாட்டுகளில் வலுவான போட்டியாளர்களாக இருப்பதால் இவற்றில் இந்தியா தங்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்தியா கணிசமான பதக்கங்களை கைப்பற்றக்கூடும்.