Published : 23 Sep 2023 05:48 AM
Last Updated : 23 Sep 2023 05:48 AM

19-வது ஆசிய விளையாட்டு போட்டி: சீனாவில் இன்று தொடக்கம்

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது. ஆனால் கரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இன்று தொடங்கும் போட்டியானது வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் ஹாங்சோ உள்ளிட்ட 5 பகுதிகளில் உள்ள 54 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

மொத்தம் 481 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து 634 வீரர், வீராங்கனைகள் 38 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018-ம் ஆண்டு போட்டியில் 16 தங்கம் உட்பட 70 பதக்கங்கள் வென்றிருந்தது. ஆசிய விளையாட்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக அமைந்துள்ளதால் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

செஸ், இ-ஸ்போர்ட்ஸ், கபடி, காம்பவுண்ட் வில்வித்தை, பிரிட்ஜ், கிரிக்கெட், படகு போட்டி, ஸ்குவாஷ் ஆகிய 8 விளையாட்டுகளில் வலுவான போட்டியாளர்களாக இருப்பதால் இவற்றில் இந்தியா தங்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்தியா கணிசமான பதக்கங்களை கைப்பற்றக்கூடும்.

தடகளத்தை பொறுத்தவரையில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து க்கொள்ளக்கூடும். 100 மீட்டர் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜி, நீளம் தாண்டுதலில் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர், டிரிப்பிள் ஜம்ப்பில் பிரவீன் சித்ரவேல், 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ், 800 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார், குண்டு எறிதலில் தஜிந்தர் பால் சிங், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அவினாஷ் சேபிள் ஆகியோர் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களுடன் தொடர் ஓட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளும் முத்திரை பதிக்கக்கூடும்.

ஹாக்கியில் இந்திய ஆடவர், மற்றும் மகளிர் அணியினர் தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன. தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். பாட்மிண்டனில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக்ஷெட் ஜோடி, ஹெச்.எஸ்.பிரனோய், பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் நிகத் ஜரீன், லவ்லினா போர்கோஹைன், பளு தூக்குதலில் மீராபாய் சானு ஆகியோர் மீதும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x