ஆசிய போட்டியில் இந்திய வீரர்களுக்கு தடை எதிரொலி: சீன பயணத்தை ரத்து செய்த அமைச்சர் அனுராக்

அமைச்சர் அனுராக் தாக்குர்  கோப்புப்படம்
அமைச்சர் அனுராக் தாக்குர் கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் மூன்று தடகள வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சீனா தடை விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு செல்ல இருந்த தனது பயணத்தை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ரத்து செய்துள்ளார்.

சீனாவின் ஹோங்சு நகரில் நாளை 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளச் சென்ற அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வுஷூ (WUSHU) வீரர்களான நைமன் வங்க்சு, ஒனிலு தேகா மற்றும் மேபுவுங் லாம்கு ஆகியோர் சீனாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "சீனாவின் இந்த நடவடிக்கை, ஆசிய விளையாட்டின் உணர்வுகளை அவமதிப்பதாக, விளையாட்டு போட்டிகளின் விதிமுறைகளையும் மீறுவதாக உள்ளது" என்று கூறியுள்ளது.

இந்நிலையில், இந்திய வுஷூ அணியில் மீதமிருக்கும் 7 வீரர்கள், அணி நிர்வாகிகள் ஹாங்காங் சென்று அங்கிருந்து சீனாவுக்குள் நுழைகின்றனர். தடைவிதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்களை விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவுக்கு திரும்ப அழைத்துள்ளது.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், "விளையாட்டு போட்டியினை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், சட்டபூர்வமான ஆவணங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வரும் வீரர்களை சீனா வரவேற்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் நீடித்து வரும் அருணாச்சலப் பிரதேச எல்லைப் பிரச்சினை காரணமாக அப்பகுதியை இந்தியாவின் பகுதியாக ஏற்க சீனா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in