ODI WC 2023 | பாபர் அஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு: இளம் வேகப்பந்து வீச்சாளர் இல்லை!

பாகிஸ்தான் அணி வீரர்கள் | கோப்புப்படம்
பாகிஸ்தான் அணி வீரர்கள் | கோப்புப்படம்
Updated on
1 min read

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸம் தலைமையிலான பாக். அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. உலகக் கோப்பையை 2-வது முறையாக வெல்லும் நோக்கத்தில் அணியை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணியை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை தொடரில் மோசமான தோல்விக்குப் பிறகு அந்த அணி உலக கோப்பை தொடரில் மீண்டு வந்து எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

பாகிஸ்தான் அணி: பாபர் அஸம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம்.

நசீம் ஷா: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயமடைந்தார். 20 வயதான அவர் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவர் இல்லாதது பாகிஸ்தானுக்கு பின்னடைவு தான். இருந்தாலும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை அறிவித்துள்ளது பாக். கிரிக்கெட் வாரியம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றுப் போட்டியில் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in