Published : 22 Sep 2023 07:10 AM
Last Updated : 22 Sep 2023 07:10 AM
மொஹாலி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் மொஹாலியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு ஒத்திகை பார்க்கும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அமையக்கூடும் என கருதப்படுகிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
முதல் இரு ஆட்டங்களும் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்,ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில்காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயஸ் ஐயர், ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றாலும் அசவுகரியமாக உணர்ந்ததால் ஒரு ஆட்டத்தில் மட்டுமே பேட்டிங்கில் களமிறங்கினார். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால் அவர், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளார்.
அதேவேளையில் ஒருநாள் போட்டிகளில் மோசமான சாதனைகளை வைத்துள்ள சூர்யகுமார் யாதவ், தனது மேம்பட்ட பேட்டிங்திறனை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறார். இதுவரை 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள சூர்யகுமார் யாதவின் சராசரி 25 ஆகவேஇருக்கிறது. உலகக் கோப்பைதொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர், தனது திறனை நிரூபிக்க வேண்டியது உள்ளது.
இது ஒருபுறம் இருக்க 23 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மீது அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது. அக் ஷர் படேல் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விலக நேரிட்டால் அந்த இடம் அஸ்வினுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களிலும் அவர், தேர்வுக்குழுவினரின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டிய நிலையில் உள்ளார். இதே நிலைமையில்தான் வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார்.
பேட்டிங்கில் தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன், இஷான் கிஷன்அல்லது ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கக்கூடும். விராட் கோலிஇடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ் கூட்டணி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்க ஆயத்தமாக உள்ளது.
ஆஸ்திரேலிய அணியானது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரை சந்திக்கிறது. கடைசியாக அந்த அணி கடந்தமார்ச் மாதம் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை வென்றிருந்தது. இந்திய ஆடுகளங்களில் சீரான செயல்திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஆஸ்திரேலிய அணி இம்முறையும் நெருக்கடி கொடுக்கக்கூடும். டிராவிஸ் ஹெட் காயம் அடைந்துள்ளதால் அவரது இடத்தை மார்ஷ் லபுஷேன் தக்க வைத்துக்கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT