“உலகக் கோப்பை அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார்” - ராகுல் திராவிட்

சூர்யகுமார் யாதவ் மற்றும் ராகுல் திராவிட்
சூர்யகுமார் யாதவ் மற்றும் ராகுல் திராவிட்
Updated on
1 min read

மொகாலி: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் திராவிட் இதனை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான 15 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.

நாளை இந்தத் தொடரின் முதல் போட்டி தொடங்க உள்ளது. வரும் 27-ம் தேதி அனைத்து அணிகளும் 15 வீரர்கள் அடங்கிய இறுதி அணியை அறிவிக்க வேண்டி உள்ளது. இந்தச் சூழலில் திராவிட் இதனை தெரிவித்துள்ளார்.

“27-ம் தேதி குறித்து சூர்யகுமார் கவலை கொள்ள தேவையில்லை. உலகக் கோப்பை தொடருக்கான அணியை நாங்கள் தேர்வு செய்துவிட்டோம். அதில் அவர் உள்ளார். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அவரிடம் உள்ள தனித்திறனை நாங்கள் பார்த்துள்ளோம். அவரது ஆட்டத்தை டி20 கிரிக்கெட்டில் நீங்கள் பார்த்து உள்ளீர்கள். ஆறாவது பேட்ஸ்மேனாக அவர் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அதை அவர் நிச்சயம் செய்வார் என நம்புகிறோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடுவார். அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தை மேம்படுத்துவார்” என்று ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in