

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரரான காஷ்யப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2010-ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற காஷ்யப், இந்த முறை தங்கப் பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டி நடைபெறும் கிளாஸ்கோ நகருக்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
இந்த முறை தங்கப் பதக்கம்தான் என்னுடைய இலக்கு. உலகின் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய் போட்டியிலிருந்து விலகிவிட்டதால், மற்றவர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் காமன்வெல்த் போட்டித் தரவரிசையில் நான் 2-வது இடத்தில் இருப்பதால் என்னால் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பது எனக்குத் தெரியும்.
ஆனாலும் அது அவ்வளவு எளிதல்ல. வெய் பெங் சாங், ராஜீவ் அவ்செப் போன்ற வீரர்கள் சவால் அளிக்கக்கூடியவர்கள். ராஜீவ், கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அவர் சீன வீரர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடி வெற்றி கண்டிருக்கிறார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார்.
இதேபோல் லண்டன் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறியவர்களான ஸ்ரீகாந்த், குருசாய் தத் ஆகியோருக்கும் பதக்கம் வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளது. அவர்கள் இருவருமே சிறப்பாக விளையாடியுள்ளனர். அவர்கள் தோற்பதற்கு வாய்ப்பில்லை. இப்போது அவர்களுடைய நிலைமை என்னவோ அதேபோன்றுதான் 4 வருடங்களுக்கு முன்பு என்னுடைய நிலைமையும் இருந்தது.
ஸ்ரீகாந்தின் ஆட்டம் எப்படி அமையும் என்பதை கணிக்க முடியாது. அவர் தாய்லாந்து ஓபனில் பட்டம் வென்றதோடு, முன்னணி வீரர்களையும் தோற்கடித்திருக்கிறார். 2010-ல் நான் தேசிய அளவிலான போட்டியில்கூட பட்டம் வெல்லவில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் இந்த ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் வென்றிருக்கிறார். குருசாய் தத், தாமஸ் கோப்பையில் மிகச்சிறப்பாக ஆடினார்.
கடந்த முறை 4 பதக்கங்களை வென்றோம். ஆனால் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வெல்வோம் என நம்புகிறேன். ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் பி.வி.சிந்து, நான் (காஷ்யப்), ஸ்ரீகாந்த் ஆகியோர் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி பதக்கம் வெல்லும் என்றார்.