

சென்னை: சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். இந்தச் சூழலில் அவரது தேர்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
37 வயதான அஸ்வின், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சீனியர் வீரராக விளையாடி வருகிறார். அதோடு ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட்டிலும் விளையாடி இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடி இருந்தார். இந்தச் சூழலில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் விளையாடி இருந்தார். 113 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 151 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தேர்வு குறித்து கேப்டன் ரோகித் விளக்கம் கொடுத்துள்ளார்.
“அஸ்வின் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவருக்கு நீண்ட அனுபவம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் அவர் விளையாடவில்லை என்றாலும் அந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். அதனால் அவருக்கு கேம் டைம் இல்லை என்பது குறித்த கவலை இல்லை. அவருடன் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். அவரிடம் இந்த ஃபார்மெட்டில் பந்து வீசும் திறன் உள்ளது. அதுதான் அவரது பந்துவீச்சை நாங்கள் பரிசீலிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது.
உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவுக்கு பக்க பலமாக இருக்க முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அதற்கு சரியான தேர்வாக இருப்பார்” என ரோகித் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வலது கை ஸ்பின்னர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.