Published : 01 Dec 2017 10:11 AM
Last Updated : 01 Dec 2017 10:11 AM

3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: சாதனை துடிப்பில் விராட் கோலியின் படை

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் வெல்வதன் மூலம் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற நாடு என்ற புதிய சாதனையை படைக்க இந்திய வீரர்கள் துடிப்பாக உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த இரு அணிகளிடையே இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை டெல்லியில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் சாதனை

இந்திய அணி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் வெற்றி பெற்றால், அது இந்திய அணி தொடர்ந்து வெல்லும் 9-வது டெஸ்ட் தொடராக இருக்கும். உலக அரங்கில் இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்று சாதனை படைத்துள்ளது. எனவே இந்திய அணி வீரர்கள் இந்த தொடரையும் கைப்பற்றி, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்ய வேண்டும் என்பதில் துடிப்பாக உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தொடரை கருத்தில் கொண்டு, இப்போட்டிக்கான ஆடுகளத்தையும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆடுகளத்தைப் பயன்படுத்தி இந்திய வேகப்பந்து வீச்சை வலுவாக்கவும் விராட் கோலி திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராக இந்திய வீரர்களுக்கு போதிய அவகாசம் இல்லை. எனவே இங்குள்ள ஆடுகளங்களையே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றச் சொல்லி பயிற்சி பெற்று வருகிறோம்” என்றார்.

ஹெராத்துக்கு பதில் சண்டகன்

அதே நேரத்தில் இந்திய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றி பெறாத இலங்கை அணி, டெல்லி டெஸ்ட் போட்டியில் வென்று புதிய சாதனை படைக்கும் எண்ணத்துடன் களம் இறங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால், “முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவிக்காததால் கடந்த டெஸ்ட் போட்டியில் தோற்றோம். எனவே டெல்லி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவிக்க முயற்சிப்போம்” என்றார்

இப்போட்டியில் இலங்கை அணியில் ஹெராத் ஆடாததால், அவருக்குப் பதில் லக்ஷன் சண்டகன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x