

செஞ்சூரியன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 164 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா. இதில் தென் ஆப்பிரிக்கா 416 ரன்களைக் குவிக்க ஆஸ்திரேலியா 252 ரன்களுக்கு 34.5 ஓவர்களில் சுருண்டது. தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக் கிளாசன் 83 பந்துகளில் 13 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் 174 ரன்களை விளாசித்தள்ளினார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 82 ரன்களை நொறுக்கினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க இப்போது 2-2 என்று சமநிலையில் உள்ளது.
இவர்கள் இருவரும் 92 பந்துகளில் 222 ரன்களைச் சேர்த்தனர். இதில் பயங்கரம் என்னவெனில் 25 ஓவர்களில் 120/2 என்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா ஹென்றிக் கிளாசனின், டேவிட் மில்லர் வெறியாட்டத்தில் கடைசி 25 ஓவர்களில் 296 ரன்கள் அதாவது கடைசி 25 ஓவர்களில் கிட்டத்தட்ட 300 ரன்கள் பக்கம் விளாசியது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ஒரு ‘நைட் மேர்’ அனுபவம்.
5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி கபில்தேவ் தான் 1983 உலகக்கோப்பையில் 175 ரன்களை விளாசி சாதனையைப் படைத்திருந்தார். நல்ல வேளை அந்தச் சாதனையை கிளாசன் முறியடிக்கவில்லை. 5 அல்லது அதற்கும் கீழான டவுனில் இறங்கி இந்த சாத்து சாத்தியது தற்போது இரண்டாவது சாதனையாக மிளிர்கிறது. ஆஸ்திரேலியாவிடம் இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகள் என 5 போட்டிகளில் தொடர் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா வீறு கொண்டு எழுந்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக்கி விட்டது.
கிளாசன் - டேவி மில்லர் கூட்டணி 222 ரன்களை ஓவருக்கு 14.47 என்ற ரன் விகிதத்தில் எடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த 200 ரன்கள் கூட்டணியும் செய்யாத தலையாய ரன் விகித சாதனையாகும். அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி 10 ஓவர்களில் 173 ரன்களை இருவரும் குவித்தது உலக சாதனையாகும். ஆஸ்திரேலிய பவுலர்கள் ஜோஷ் ஹேசில்வுட் 10 ஓவர் 79 ரன்கள், ஆடம் ஜாம்ப்பா 10 ஓவர்களில் 113 ரன்கள் என்று பவுலிங்கில் சதம் கண்டார். ஆடம் ஜாம்ப்பா மட்டுமே 8 பவுண்டரிகள் 9 சிக்சர்களை கொடுத்தார். 38 பந்துகளில் அரைசதம் கண்ட ஹென்றிக் கிளாசன் அடுத்த 19 பந்துகளில் சதம் கண்டார். இதில் ஸ்டாய்னிஸை ஒரே ஓவரில் 3 பெரிய சிக்சர்கள் விளாசினார். அடுத்த 26 பந்துகளில் 74 ரன்கள் என்று பொங்கி எழுந்தார். முறியடிக்கப்பட்ட சாதனைகள்: