ஆசிய கோப்பை | இந்தியாவுக்கு 266 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்
கொழும்பு: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 265 ரன்களை எடுத்தது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் - லிட்டன்தாஸ் இணையை 2-வது ஓவரிலேயே முஹம்மது சமி பிரித்தார். ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார் லிட்டன் தாஸ். 3ஆவது ஓவரில் தன்சித் ஹசனை 13 ரன்களில் ஷர்துல் தாக்கூர் வெளியேற்றினார். தொடர்ந்து அனாமுல் ஹக்கின் விக்கெட்டையும் பறிகொடுத்து 6 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 29 ரன்களில் தடுமாறியது வங்கதேச அணி.
மெஹிதி ஹசன் மிராஸ் - ஷகிப் அல் ஹசன் இணை சேர்ந்து இனியும் விக்கெட்டை விட்டுகொடுக்க கூடாது என சபதமேற்று ஆடினர். ஆனால், அவர்களின் சபதத்தை 13-ஓவரில் முறியடித்தார் அக்சர் படேல். மெஹிதி ஹசன் 13 ரன்களில் அவுட். மறுபுறம் நின்றிருந்த ஷகிப் அல் ஹசன் ஏற்ற சபதத்தில் உறுதியாக நின்று அடித்து ஆடி அணிக்கு பலம் சேர்த்தார். அவருக்கு தவ்ஹீத் ஹ்ரிதோய் உறுதுணையாக நிற்க இருவரும் இணைந்து விளையாடி அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர். 85 பந்துகளில் 80 ரன்களைச் சேர்த்த ஷகிப்பின் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் எடுத்தது இந்திய அணிக்கு ஆசுவாசம் கொடுத்தது. 34வது ஓவர் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 161 ரன்களைச் சேர்த்தது வங்க தேசம்.
ஷமிம் ஹொசைன் 1 ரன்களிலும், தவ்ஹீத் 54 ரன்களிலும், நசும் அகமது 44 ரன்களிலும் அவுட்டாக இறுதியில் போராடிய வங்க தேசம் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை சேர்த்தது. தன்சிம் ஹசன் சாகிப் 14 ரன்களிலும், மெஹிதி ஹசன் 29 ரன்களிலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முஹம்மது சமி 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், ஜடேஜா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
