Published : 15 Sep 2023 11:59 AM
Last Updated : 15 Sep 2023 11:59 AM

ஆசிய விளையாட்டுப் போட்டி | இருவேறு அணிகள் அறிவிப்பு; இந்திய கால்பந்து அணியில் குழப்பம்

கோப்புப்படம்

சென்னை: எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்த விவரம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த புதன்கிழமை அன்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) இந்த தொடருக்கு மாற்றம் செய்யப்பட்ட அணியை அறிவித்திருந்தது.

இந்தச் சூழலில் வியாழக்கிழமை அன்று மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்தியா சார்பில் பங்கேற்கும் 655 வீரர்கள் குறித்த விவரத்தை அறிவித்தது. அதில் ஏஐஎஃப்எஃப் அறிவித்த கால்பந்து அணிக்கு முற்றிலும் மாறான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வரும் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏஐஎஃப்எஃப் இதை அறிவித்தது.

இந்தச் சூழலில் முன்பு அறிவிக்கப்பட்ட அணியை கடந்த புதன்கிழமை அன்று மாற்றி அறிவிப்பு வெளியானது. மாற்றம் செய்யப்பட்ட அணியில் சந்தேஷ் ஜிங்கன், குர்பிரீத் சிங் சாந்து இடம்பெறவில்லை. இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெற்றிருந்தனர். அதே போல முன்பு அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெற்றிருந்த 11 வீரர்கள் புதன் அன்று அறிவிக்கப்பட்ட அணியில் இல்லை.

கடந்த 2018-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் கால்பந்து பிரிவுக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. இதைத் தொடர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி விளையாடவுள்ளது.

இந்திய அணி (ஏஐஎஃப்எஃப் - ஆகஸ்ட்.1): குர்பிரீத் சிங் சாந்து, குர்மீத் சிங், தீரஜ் சிங் மோராங்தெம், சந்தேஷ் ஜிங்கன், அன்வர் அலி, நரேந்தர் கெலாட், லால்சங்நுங்கா, ஆகாஷ் மிஷ்ரா, ரோஷன் சிங், ஆசிஷ் ராய், ஜீக்சன் சிங் தவுனஜாம், சுரேஷ் சிங் வாங்ஜாம், அபுயா ரால்டே, அமர்ஜித் சிங் கியாம், கே.பி.ராகுல், நரேம் மகேஷ் சிங், சிவசக்தி நாராயணன், ரஹிம் அலி, சுனில் சேத்ரி, அனிக்கெட் ஜாதவ், விக்ரம் பர்தாப் சிங், ரோஹித் தானு.

இந்திய அணி (ஏஐஎஃப்எஃப் - செப்.13): குர்மீத் சிங், தீரஜ் சிங், சுமித் ரதி, நரேந்தர் கஹ்லோட், அமர்ஜித் சிங், சாமுவேல் ஜேம்ஸ், ராகுல் கே.பி, அப்துல் ரபீ அஞ்சுகண்டன், ஆயுஷ் தேவ், பிரைஸ் மிராண்டா, அஸ்பர் நூரானி, ரஹீம் அலி, வின்சி பாரெட்டோ, சுனில் சேத்ரி, ரோகித் தாணு, குர்கிரித் சிங், அனிகேத் ஜாதவ்.

இந்திய அணி (விளையாட்டு அமைச்சகம் - செப்.14): குர்பிரீத் சிங் சாந்து, குர்மீத் சிங், விஷால் யாதவ், அன்வர் அலி, நரேந்தர் கெலாட், சந்தேஷ் ஜிங்கன், ஆகாஷ் மிஷ்ரா, லால்சங்நுங்கா, ஆயுஷ் தேவ் சேத்ரி, அமர்ஜித் சிங் கியாம், மகேஷ் சிங், அப்துல் ரபி, சாமுவேல் ஜேம்ஸ், ஜீக்சன் சிங், சுரேஷ் சிங், ரஹீம் அலி, அனிக்கெட் ஜாதவ், ராகுல் கே.பி, லிஸ்டன் கோலாகோ, சுனில் சேத்ரி, வின்சி பாரெட்டோ, விக்ரம் பிரதாப் சிங்.

ஏற்கனவே இந்திய கால்பந்து அணி ஜோதிடரின் பரிந்துரையில் தேர்வு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் ஏஐஎஃப்எஃப் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் என இருவேறு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x