

லண்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் பதிவு செய்துள்ளார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் முன்னணி வகிக்கும் சாதனை பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
32 வயதான ஸ்டோக்ஸ், சுமார் 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வகையில் அணிக்கு திரும்பினார். எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக ஆல்ரவுண்டரான அவர் கம்பேக் கொடுத்துள்ளார். அணிக்கு திரும்பியதும் முதல் போட்டியிலேயே அரைசதம் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து மூன்றாவது போட்டியில் 124 பந்துகளில் 182 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 15 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இப்போது அவர் உள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் உடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது அல்லது அதற்கும் கீழான ஆர்டரில் களம் கண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஸ்டோக்ஸ் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.