Published : 06 Dec 2017 11:01 AM
Last Updated : 06 Dec 2017 11:01 AM

ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தேர்வில் திருப்தியில்லை: இலங்கை வீரர்களின் விமான பயணத்தை கடைசி நேரத்தில் நிறுத்திய அமைச்சர்; இரு மாற்றங்களையாவது செய்ய வேண்டுமென கெடுபிடி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கலந்து கொள்ள உள்ள இலங்கை அணி வீரர்கள் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் புறப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த பயணத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் நிறுத்தி வைத்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இந்த தொடரானது டிசம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான கட்டத்தில் தர்மசாலா, மொகாலி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் பதவியில் இருந்து உபுல் தரங்கா நீக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையிலான இலங்கை அணி இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கு திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டெஸ்ட் அணி கேப்டன் தினேஷ் சந்திமாலுக்கும் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை.

டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த மேத்யூஸ், சுரங்கா லக்மல், திக்வெலா, சதீரா சமரவிக்ரமா, லகிரு திரிமானே, ஜெப்ஃரி வாண்டர்சே ஆகியோருக்கு மட்டுமே ஒருநாள் போட்டித் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதம் உள்ள 9 வீரர்களான திசாரா பெரேரா, உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகா, குணரத்னே, சதுரங்கா டி சில்வா, சச்சித் பதிரனா, துஷ்மந்தா சமீரா, நுவன் பிரதீப் அகிலா தனஞ்ஜெயா ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட தயாராக இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் இவர்களின் பயணத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து விமான நிலையத்துக்கு புறப்பட்ட 9 வீரர்களும் அவசரமாக திரும்ப அழைக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டித் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அணி திருப்திகரமாக இல்லை என்பதால் விளையாட்டுத் துறை அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இலங்கை அணி பங்கேற்ற 25 ஒருநாள் போட்டிகளில் 21 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அணித் தேர்வுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் முறையான அனுமதி வழங்கும் முன்னதாகவே வீரர்கள் புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இருந்து 2 வீரர்களையாவது மாற்ற வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர், கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை நாட்டின் 1973-ம் ஆண்டு சட்டப்படி தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் அணியை மாற்றும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x