

கொழும்பு: ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் கொடுத்துள்ள கம்பேக் இன்னிங்ஸ் மகிழ்ச்சி தருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 128 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராகுல் மற்றும் கோலி இணைந்து 233 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அடுத்தடுத்து சதம் பதிவு செய்திருந்தனர்.
“அணிக்கு வெவ்வேறு வழிகளில் உதவ எப்போதும் நான் தயாராக இருப்பேன். இந்தப் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. எனது பணி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது மட்டும் தான். அதனால் சிங்கிள் மற்றும் இரட்டை ஓட்ட ரன்களை எடுத்தேன். பொதுவாக நான் ஃபேன்சி ஷாட் ஆட மாட்டேன். நூறு ரன்களை நான் கடந்த காரணத்தால் அந்த ரேம்ப் ஷாட் ஆடினேன். ராகுலுக்கும், எனக்குமான கூட்டணி அணிக்கு நலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலின் கம்பேக் இன்னிங்ஸ் இப்படி அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
நான் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்டுள்ள காரணத்தால் அடுத்தடுத்த நாட்களில் எப்படி விளையாடுவது, அதற்கு எப்படி தயார் ஆவது என்பதை நன்கு அறிவேன். (இன்று சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது). மழை குறுக்கீடு இருந்தபோதும் மைதான பராமரிப்பு பணியாளர்களின் சிறப்பான பணி காரணமாக போட்டி நடைபெற்றது. அவர்களுக்கு நன்றி” என கோலி தெரிவித்தார்.