

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும் மாற்று நாளான இன்று போட்டி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருந்தது. ஸ்ரேயஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக களமிறங்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டார். மேலும் மொகமது ஷமிக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்கினார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் கூட்ட அற்புதமான தொடக்கம் கொடுத்தனர். முதலில் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 10 ஓவர்களை கடந்ததும் மட்டையை சுழற்றினார். தனது 50வது அரை சதத்தை கடந்த ரோஹித் சர்மா 49 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசிய நிலையில் ஷதப் கானின் பந்து வீச்சில் பாஹீம் அஷ்ரபின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில் 52 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் எளிதான முறையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 16.4 ஓவர்களில் 121 ரன்கள் சேர்த்தது. 24.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. சுமார் 6.15 மணி அளவில்மழை நின்ற நிலையில் மிட்விக்கெட் திசையில் அதிக அளவில் ஈரப்பதம் காணப்பட்டது. இதைஉலர்த்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆடுகளத்தை நடுவர்கள் பார்வையிட்டனர். அப்போது மைதானத்தில் ஈரம் முழுமையாக உலர்த்தப்படாமல் இருந்தது. இதையடுத்து மின்விசிறிகள் கொண்டு ஈரத்தை உலர்த்தும் பணி நடைபெற்றது.
8.30 மணிக்கு மீண்டும் ஆடுகளத்தை பார்வையிடுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த நேரத்தில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாற்று நாளான இன்று போட்டி தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 24.1 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்தில் இருந்தே ஆட்டம் தொடங்கப்படும். விராட் கோலி 8, கே.எல்.ராகுல் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்கும்.