Published : 01 Dec 2017 10:23 AM
Last Updated : 01 Dec 2017 10:23 AM

உலக ஹாக்கி லீக் இன்று தொடக்கம்: ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்திய அணி?

உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. ‘பி’ பிரிவில் நடக்கும் ஆட்டத்தில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி ஆடுகிறது.

உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டிகள் புவனேஸ்வர் நகரில் இன்று தொடங்குகிறது. 10-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் உலகின் தலைசிறந்த ஹாக்கி அணிகளாக கருதப்படும் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின், அர்ஜென்டினா, இங்கிலாந்து ஆகியவை கலந்துகொள்கின்றன. இதில் இந்தியா இடம்பெற்றுள்ள பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஜெர்மனி ஆகிய அணிகள் உள்ளன.

நம்பிக்கையுடன் இந்தியா

பி பிரிவில் இன்று மாலை நடக்கவுள்ள போட்டியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி ஆடவுள்ளது. ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி, நடுவில் சில ஆண்டுகள் ஹாக்கியில் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்காமல் இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நவீன ஹாக்கி தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்ட இந்திய வீரர்கள், மற்ற அணிகளுக்கு சவால் விடும் வகையில் ஆடி வருகின்றனர். சமீபத்தில் ஆசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, மிகுந்த நம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.

இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் மோதிய சாம்பியன்ஸ் கோப்பை, காமன்வெல்த் மற்றும் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டிகளில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியை வெல்ல இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும். இந்திய அணியின் பயிற்சியாளராக 2 மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட ஜோர்ட் மரினுக்கும் இப்போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும்.

பயிற்சியாளராக மரின் பொறுப்பேற்ற பிறகு, அணியில் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தாங்கள் எப்படி ஆடவேண்டும் என்பது பற்றி வீரர்களே வியூகம் அமைத்துக் கொள்ளலாம் என்பதே அவரது பிரதான கொள்கையாக இருந்துள்ளது. இது இந்திய அணியின் ஆட்டத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பயிற்சியாளர் கருத்து

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியைப் பொறுத்தவரை, அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட கலவையுடன் இந்தத் தொடரை சந்திக்கிறது. ஹர்மன்பிரீத் சிங், சுமித், தீப்சன் திர்க்கி, குர்ஜந்த் சிங், வருண் குமார் ஆகிய இளம் வீரர்களையும், ருபீந்தர் பால் சிங், பீரேந்திர லக்ரா ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்களையும் இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது.

இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய இந்திய அணியின் பயிற்சியாளர் ஜோர்ட் மரின், “இந்திய அணி சிறப்பாக தயாராகி உள்ளது. காயத்தால் சில காலம் ஆடாமல் இருந்த மூத்த வீரர்களும் தற்போது நன்றாக இருக்கிறார்கள். இந்திய அணி இத்தொடரில் எதிரணிகளுக்கு சவாலாக விளங்கும்” என்றார்.

ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு பேர் போன ஆஸ்திரேலிய அணி, கடந்த முறை உலக ஹாக்கி லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதை தக்கவைக்கும் முயற்சியுடன் இந்த தொடரில் களம் இறங்குகிறது. இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x