

கொழும்பு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டி மழை காரணமாக ‘ரிசர்வ் டே’-வான நாளைய (செப். 11) தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் இணைந்து 121 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் ஷா அஃப்ரிடியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
கேப்டன் ரோகித், இன்னிங்ஸை நிதானமாக தொடங்கினார். 49 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஷதாப் கான் வீசிய பந்தை பெரிய ஷாட் ஆட முயன்று, கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரே ஷாஹின் ஷா நிதானமாக வீசிய பந்தை டிரைவ் ஆடிய கில், கேட்ச் கொடுத்து வெளியேறினார். 52 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். 10 பவுண்டரிகளை விளாசி இருந்தார்.
தொடர்ந்து கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து இன்னிங்ஸை அணுகினர். 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. அப்போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. மைதான பராமரிப்பாளர்கள் துரிதமாக செயல்பட்டு மைதானத்தை கவர் செய்தனர். மழை நின்றதும் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 9 மணி (இரவு) அளவில் ஆட்டம் தொடங்குவது குறித்து நடுவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மீண்டும் மழை பொழிவு தொடங்கிய காரணத்தால் இந்தப் போட்டி நாளை நடைபெறும் என அறிவித்தனர். களத்தில் கோலி மற்றும் கே.எல்.ராகுல் உள்ளனர். நாளை மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.