Published : 10 Sep 2023 05:43 AM
Last Updated : 10 Sep 2023 05:43 AM

‘இது ஆரம்பம்தான்’ - ஷாகீன் ஷா அப்ரிடி

ஷாகீன் ஷா அப்ரிடி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விரைவிலேயே ஆட்டம் இழக்கக் செய்து அழுத்தம் கொடுத்தார் பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரன ஷாகீன் ஷா அப்ரிடி. அந்த ஆட்டத்தில் 35 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். எனினும் அந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளன. இதனால் ஷாகீன் ஷா அப்ரிடி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தன்னிடம் இருந்து சிறந்த செயல் திறன் இன்னும் வெளிப்படவில்லை என அவர், தெரிவித்துள்ளார்.

இதொடர்பாக ஷாகீன் ஷா அப்ரிடி கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் சிறப்பு வாய்ந்தது. இந்த போட்டியை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள். நான் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்காக ஒரு ரசிகனாக காத்திருந்துள்ளேன். லீக் சுற்றில் வீசிய பந்து வீச்சு என்னுடைய சிறந்த செயல்திறன் என என்னால் கூற முடியாது. இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் அதிகம் இருக்கிறது. என்னிடம் இருந்து சிறந்தவை இன்னும் வெளிப்படவில்லை.

பாகிஸ்தான் அணிக்காக இவ்வளவு சிறிய வயதில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறேன். இதனால் புதிய பந்தை கையில் எடுக்கும் போது, உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை தொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் உட்பட அணியில் உள்ள பந்து வீச்சாளர்கள் அனைவருமே புதிய பந்து மற்றும் பழைய பந்தில் அவர்களுடைய பணியை அறிவார்கள்.

ஹரிஸ் ரவூஃப் எங்களைவிட விரைவாக வீசக்கூடியவர். வேகத்தால் அவர், தாக்கத்தை ஏற்படுத்துகிறார். நசீம்ஷாவும் நானும் தொடக்கத்தில் விக்கெட்களை வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்கிறோம். எங்களுக்குள் தகவல் தொடர்பு சிறப்பாக உள்ளது. அதுதான் எங்களது வெற்றி. உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் நாங்கள் நன்றாகவே தயாராகி உள்ளோம். ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ள வெளிநாட்டு வீரர்கள் அனைவரிடமும் நாங்கள் கலந்துரையாடி உள்ளோம். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பாகிஸ்தான் அல்லது துபாய் ஆடுகளங்களை போன்றே இருக்கும் என்று நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் இருந்து உதவி கிடைக்கக்கூடும். நாங்கள் சிறந்த லென்த்தில் பந்து வீச வேண்டும்.

முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி சிறந்த வீரர். பெரிய அளவிலான போட்டிகளுக்கு முன்னதாக அவரது சிந்தனைகளுடன் எனது திட்டங்களை சேர்க்க முயற்சிப்பேன். அவர், என்னிடம் கூறுவது, ‘உன்னுடைய விளையாட்டை விளையாடு’ என்பதுதான். போட்டி இல்லாத நாட்களில் நான் அதிகம் வெளியே செல்வது இல்லை. எனது வீட்டு அறையிலேயே தங்கி இருப்பேன். கிரீன் டீ தயாரிப்பேன். கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விஷயங்கள் குறித்து பேசுவேன். அது என்னை நிம்மதியாக வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x