Published : 30 Dec 2017 10:33 AM
Last Updated : 30 Dec 2017 10:33 AM

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20-ல் நியூஸிலாந்து அணி வெற்றி: காலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ் அசத்தல்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெல்சன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. காலின் மன்றோ 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும் விளாசினர். மார்ட்டின் கப்தில் 5, டாம் புரூஸ் 2, ராஸ் டெய்லர் 20, கிட்சன் 12 ரன்கள் சேர்த்தனர்.

மிட்செல் சான்ட்னர் 11 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 23 ரன்களும், டிம் சவுதி 5 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 162 ரன்களே சேர்த்திருந்தது. கடைசி ஓவரை வீசிய கேசரிக் வில்லியம்ஸ் 3 நோபால்களை வீசியதுடன் 25 ரன்களை வாரி வழங்கினார். இதுவே நியூஸிலாந்து அணி வலுவான இலக்கை அமைக்க ஒரு காரணியாக அமைந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிராத்வெயிட், ஜெரோம் டெய்லர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரர்களான வால்டன் 7, கிறிஸ் கெய்ல் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். 19 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. பிளெட்சர் 27, ஜேசன் முகமது 3, ஷாய் ஹோப் 15, பிராத்வெயிட் 21, பொவல் 6, கேசரிக் வில்லியம்ஸ் 3, ஜெரோம் டெய்லர் 20, சாமுவேல் பத்ரி 2 ரன்களில் நடையை கட்டினர்.

ஆஷ்லே நர்ஷ் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரரான சேத் ரான்ஸ், டிம் சவுதி ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக கிளென் பிலிப்ஸ் தேர்வானார். 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டி 20 ஆட்டம் வரும் 1-ம் தேதி பே ஓவலில் நடைபெறுகிறது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x