Published : 04 Jul 2014 04:48 PM
Last Updated : 04 Jul 2014 04:48 PM

ஐசிசி மூலம் பிசிசிஐ-க்கு 8 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி வருவாய் உறுதி

ஐசிசி நிர்வாகத்தை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததில், இந்திய கிரிக்கெட்டிற்கு அதிக பயன் ஏற்பட்டுள்ளது என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்துள்ளார்.

ஐசிசி-யின் தற்போதைய புனரமைப்பிற்கு முன்னதாக 8 ஆண்டுகளில் ஐசிசி மூலம் பிசிசிஐ-க்கு ரூ.300 கோடிதான் வருவாய் கிட்டியுள்ளது. ஐசிசி-யின் வருவாயில் இந்திய கிரிக்கெட்டின் பங்களிப்பு 72 சதவீதம். ஆகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஐசிசி வருவாயில் பெரும் பங்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

'தற்போது ஐசிசி-யின் மொத்த வருவாயில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 22% அளிக்கப்படும். மேலும் லாபங்களில் 4% தொகையும் அளிக்கப்படவுள்ளது. இதனால் அடுத்த 8 ஆண்டுகளில் பிசிசிஐ-க்கு ஐசிசி மூலம் ரூ.4000 கோடி வருவாய் கிடைக்கவுள்ளது' என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் கூறுகையில், "இந்தியாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தவும், வீரர்களின் பயன்களுக்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும். தற்போது தனது வருவாயில் பிசிசிஐ 26% தொகையை வீரர்களுடன் பகிர்ந்து வருகிறது. இனி இந்தத் தொகை அதிகரிக்கும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "10 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே நடைபெறும். அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறும். 2016 முதல் 2023 வரை ஆண்டொன்றிற்கு இந்தியாவில் குறைந்தது 2 டெஸ்ட் தொடர்கள் நடைபெறும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபரில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது

இந்த புனரமைப்பின் மூலம் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் பயனளிக்கும் வகையிலேயே திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராகவும் சில தொடர்களை விளையாடவிருக்கிறோம்" என்றார் சஞ்சய் படேல்.

ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதற்கு உலக கிரிக்கெட் அரங்கில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் மீதே புகார்கள் இருக்கும்போது, அவர் தலைமையில் ஐசிசி நேர்மையாகச் செயல்படுமா என்று கிரிக்கெட் வீரர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பால்மார்ஷ் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் உலக கிரிக்கெட்டை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது கிரிக்கெட்டை சீரழிக்கும் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு கிடைக்கும் பயன் என்ன என்பதை சஞ்சய் படேல் விளக்கியுள்ளார். மற்ற நாடுகளுக்குக் கிடைக்கும் பயன் மற்றும் கிரிக்கெட் ஆட்டம் ஒட்டுமொத்தமாக என்ன வளர்ச்சி காண்கிறது என்பதெல்லாம் போகப் போகவே தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x