

இந்திய வெற்றியை மனம் திறந்து பாராட்டியுள்ள முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி, அணியில் அஸ்வின் இல்லாதது ஏமாற்றளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"அஸ்வின் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியிருக்க வேண்டும், ஆனால் ஸ்டூவர்ட் பின்னியைக் குறை கூறவில்லை. லார்ட்ஸ் 2வது இன்னிங்ஸில் அவர் பந்து வீசத் தேவை ஏற்படாதபோது அணியில் அவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.
அஸ்வின் அணியில் இல்லாமல் முரளி விஜய்யை பந்து வீச அழைப்பது அறிவுபூர்வமாகத் தெரியவில்லை. இரு அணிகளுமே இந்த விஷயத்தில் கோட்டை விடுகின்றனர், ஆனால் இங்கிலாந்து கோட்டைவிட்டது அதிகம்.
இந்தியாவின் ஆட்டத்திலிருந்து நாம் எதையும் பறித்து விட முடியாது, அற்புதமாக ஆடினார்கள். டாஸை தோற்றதையும் நாம் நினைவில் கொள்வது நலம். இங்கிலாந்து தரமற்ற கிரிக்கெட்டை ஆடினர். உதவிபுரிய முடியாத அளவுக்கு அந்த அணி நம்பிக்கையற்று விளையாடியது.
இங்கிலாந்து மூத்த வீரர்கள் குக், பெல், பிரையர், ஆகியோர் தடுமாற இந்தியாவின் இளம் வீரர்கள் ரஹானே, இஷாந்த் சர்மா, புவனேஷ் சிறப்பாக ஆடியது கவனிக்கத்தக்கது.
இந்த வெற்றியிலிருந்து இந்திய அணி இன்னும் உச்சத்திற்குச் செல்ல வேண்டியது அவசியம்”
இவ்வாறு கூறினார் பிஷன் சிங் பேடி.