

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் துருப்புச்சீட்டாக குல்தீப் யாதவ் இருப்பார் என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதனை எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான ரோகித் தலைமையிலான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
“உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவின் துருப்புச்சீட்டாக குல்தீப் யாதவாக இருக்க முடியும். அவர், வலது மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சம திறனுடன் பந்து வீசும் வல்லமை கொண்டவர். அவர் கைப்பற்றியுள்ள 141 ஒருநாள் விக்கெட்களில், 81 வலது கை பேட்ஸ்மேன்கள் மற்றும் 60 இடது கை பேட்ஸ்மேன்கள். அணியில் ஆஃப் ஸ்பின்னர் இல்லை என்ற குறையை போக்க செய்வார்” என கைஃப் தெரிவித்துள்ளார்.