

லிஸ்பன்: உலக கால்பந்தாட்ட வரலாற்றை தாங்கள் இருவரும் மாற்றி அமைத்தவர்கள் என மெஸ்ஸியையும், தன்னையும் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 38 வயதான அவர் போர்ச்சுகல் மற்றும் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரொனால்டோ அறியப்படுகிறார். கடந்த 2003 முதல் அவர் சர்வதேச போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார். கிளப், சர்வதேசம் என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 850 கோல்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அண்மையில் படைத்தார். இந்தப் பட்டியலில் மெஸ்ஸி, இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தச் சூழலில் லிஸ்பனுக்கு அருகே உள்ள ஓயைரஸ் பகுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
“நான் எனது கோல் எண்ணிக்கையை இதற்கும் மேல் கூட்டவே விரும்புகிறேன். நான் களத்தில் விளையாடும் காலம் வரை எனது இலக்கை மிக உயரத்தில் வைக்க வேண்டும் எனக் கருதுகிறேன். எதிர்வரும் யூரோ கோப்பை தொடருக்கான இரண்டு குவாலிபையர் போட்டியிலும் போர்ச்சுகல் வெற்றி பெற வேண்டுமென விரும்புகிறேன். அது நடந்தால் நாங்கள் யூரோ கோப்பைக்கு தகுதி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் மெஸ்ஸி குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. “உங்களுக்கு ரொனால்டோவை பிடிக்கும் என்பதற்காக மெஸ்ஸியை வெறுக்க வேண்டியதில்லை. நாங்கள் உலக கால்பந்தாட்ட வரலாற்றை மாற்றி அமைத்தவர்கள். நாங்கள் இருவரும் 15 ஆண்டு காலம் ஆடுகளத்தை பகிர்ந்து கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொடுத்து வருகிறோம். நாங்கள் இருவரும் நண்பர்கள் என நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் அவருடன் சாட் செய்தது இல்லை. உணவு கூட இணைந்து சாப்பிட்டது கிடையாது. நாங்கள் இருவரும் தொழில்முறை சகாக்கள்.
அவர், அவரது வழியிலும். நான், எனது வழியிலும் பயணிக்கிறோம். நான் பார்த்ததிலிருந்து இருவரது ஆட்டமும் மேம்பட்டுள்ளது. நான் ஐரோப்பாவுக்கு வெளியில் வந்து விளையாட விரும்புகிறேன். அதை செய்கிறேன். ரசிகர்கள் ரொனால்டோ vs மெஸ்ஸி என வைத்து பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.